உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகள் உயிரிழந்த விவகாரத்தில் மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசம் லக்கிம்பூர் பகுதியில் அம்மாநில துணை முதல்வர் கேசவ் மவுரியா மற்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா ஆகியோர் அரசு விழாவில் பங்கேற்க நேற்று சென்றுகொண்டிருந்தனர். அப்போது, வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர்களின் வருகையை கண்டித்து, விவசாயிகள் கறுப்புக்கொடி ஏந்தி வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது துணை முதல்வர் மற்றும் மத்திய அமைச்சர் ஆகியோருடன் வந்த வாகனம் திடீரென விவசாயிகள் கூட்டத்திற்குள் நுழைந்தது.

இதில் கார் மோதி ஏராளமான விவசாயிகள் காயமடைந்தனர். இந்த விபத்தில் 4 விவசாயிகள் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்துள்ளனர். 15-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த விவகாரம் தேசிய அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து விவசாய அமைப்பான சம்யுக்த் கிசான் மோர்ச்சா அமைப்பினர் கூறும்போது, மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவுக்கு பாதுகாப்புக்கு வந்த வாகங்களின் வரிசையில் மிஸ்ராவின் மகன் ஒரு காரை ஓட்டி வந்ததாகவும், அவரே விவசாயிகள் மீது காரை ஏற்றியதாகவும், நடந்த சம்பவத்துக்கு அமைச்சரின் மகனே காரணம் எனவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதற்கிடையில் நடந்த சம்பவத்துக்கும் தனது மகனுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என அமைச்சர் அஜய் மிஸ்ரா கூறியுள்ளார். அதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்கச் சென்ற பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்டவர்களைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் பதிவிட்ட ட்விட்டர் பதிவில், ‘உத்தரப் பிரதேச விவசாயிகள் போராட்டத்தில் 8 விவசாயிகள் உயிரிழந்த நிகழ்வு துயரமளிக்கிறது. கோரிக்கை வைக்கவே உயிரிழக்க வேண்டும் என்ற நிலைமை கொடுமை. அதை வெளியுலகம் அறியக்கூடாது என எண்ணுவது உத்தரப் பிரதேச அரசின் மூர்க்கம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.