தமிழக அணிக்காக விளையாடிய முன்னாள் கிரிக்கெட் வீரர்களைக் கவுரவித்து அவர்களுக்கு நிதியுதவி வழங்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

கடந்த 85 ஆண்டுகளாக தமிழகத்திலிருந்து ஏராளமான கிரிக்கெட் வீரர்கள் உருவாகியுள்ளனர். ஏராளமான கிரிக்கெட் வீரர்களை இந்திய அணிக்குத் தமிழகம் தந்து மிகப்பெரிய அடித்தளத்தை உருவாக்கத் துணை புரிந்துள்ளது. ஆனால், தமிழகத்தைச் சேர்ந்த தமிழக அணிக்காக முன்பு கிரிக்கெட் விளையாடிய 50 முதல் 60 வயதைக் கடந்த பலர் இன்று பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறார்கள்.

அவர்களுக்கு உதவும் வகையிலும், கவுரவித்து நிதியுதவியை வழங்க சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், “கிரிக்கெட்டிற்கு அளப்பரிய பங்களிப்பு செய்தமைக்காவும், அங்கீகரிக்கும் வகையிலும் தமிழகத்துக்காக ஆடி, கிரிக்கெட்டை மேம்படுத்திய சில கிரிக்கெட் வீரர்கள், மைதான பராமரிப்பாளர்கள், போட்டி அலுவலர்கள் உள்ளிட்டோருக்கு ஒருமுறை நிதியுதவியாக ரூ.5 லட்சம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சில அனுபவமான கிரிக்கெட் வீரர்களை அங்கீகரித்து ரூ.7 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் தமிழகத்துக்காக ஆடிய பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பர் கே.ஆர்.ராஜகோபால் நிதியுதவி பெறுகிறார். 1967-ம் ஆண்டு ஆஸ்திரேலியத் தொடருக்கு இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வாய்ப்பை இழந்தார். ரஞ்சிக் கோப்பை போட்டியில் ராஜகோபால் 800 ரன்கள்வரை குவித்தார்.

சிறந்த ஆல்ரவுண்டான நிஜாம் ஹூசைன், மைசூர், மெட்ராஸ், ஜாலி ரோவர்ஸ் அணிகளுக்காக விளையாடியுள்ளார். 1960-ம் ஆண்டில் மைசூர் அணிக்காக ஆடிய ஹூசைன் ஹைதராபாத் அணிக்கு எதிராக சதம் அடித்து உலக சாதனை படைத்தார். இதில் மைசூர் அணி வீழ்த்திய 20 விக்கெட்டுகளுமே கேட்ச் மூலம் எடுக்கப்பட்டவையாகும்.

தமிழகம் மற்றும் தென் மண்டலத்துக்காக விளையாடியவர் எஸ்.வி.எஸ்.மணி, இவரோடு சேர்ந்த ஜாம்பவான்கள், வி.வி.குமார், எஸ். வெங்கட்ராகவன், ஏ.ஜி.மில்கா சிங், ஜெய்சிம்ஹா, பிரசன்னா, ஏ.ஜி.கிரிபால் சிங் ஆகியோர் இந்திய அணியில் டெஸ்ட் ரிசர்வ் வீரர்களாக இருந்தனர்.

தமிழக ரஞ்சி அணியில் இருந்தவர் ஆர்.பிரபாகர். மிதவேகப்பந்துவீச்சாளரான பிரபாகர், இன்கட்டர், அவுட் ஸ்விங்கை பிரமாதமாக வீசுவார். இந்து டிராபி போட்டியில் 16 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகள் என மொத்தம் 160 ரன்கள் விளாசியவர் பிரபாகர். அன்றைய காலகட்ட ரசிகர்கள் மனதில் பிரபாகர் ஆட்டம் கண்முன்னே வரும்.

1973-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டுவரை எம்.ஏ.சிதம்பரம் அரங்கின் வழிகாட்டியாக, கண்காணிப்பாளராக இருந்தவர் கே.பார்த்தசாரதி. 3 உலகக் கோப்பை போட்டிகள், 4 மகளிர் உலகக் கோப்பை போட்டிகள், இந்தியா ஏ சீரிஸ் எனப் பல போட்டிகளைக் கண்காணித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.