அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2028-ம் ஆண்டு நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டைச் சேர்ப்பதற்கு முயற்சி எடுக்கப்படும் என்று ஐசிசி இன்று தெரிவித்துள்ளது.

ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை இணைப்பதற்குத் தேவையான அனைத்து ஆதரவுகளையும் பிசிசிஐ வழங்கும் என்று ஏற்கெனவே கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட் வாரியத்துக்கான தனித்தன்மை, சுய அதிகாரம் போன்றவை இந்திய ஒலிம்பிக் அமைப்பு தலையிட்டால் குறைந்துவிடும் என பிசிசிஐ முதலில் கருதியது. ஆனால், பிசிசிஐ செயலாளராக ஜெய் ஷா வந்தபின், ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டைச் சேர்க்க ஐசிசி முயற்சி எடுத்தால், அதற்கு பிசிசிஐ தேவையான ஆதரவை வழங்கும் எனத் தெரிவித்தார்.

2028-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டைச் சேர்ப்பதற்காகப் பணியாற்ற ஒலிம்பிக் செயல் குழுவையும் ஐசிசி அமைத்துள்ளது.

இதுகுறித்து ஐசிசி அமைப்பின் தலைவர் கிரேக் பார்க்ளே வெளியிட்ட அறிக்கையில், ”ஒலிம்பிக்கில் கிரிக்கெட் நீண்ட காலத்துக்கு இருக்க வேண்டும். உலக அளவில் 100 கோடி ரசிகர்கள் கிரிக்கெட்டுக்காக இருக்கிறார்கள். அமெரிக்காவில் மட்டும் 3 கோடி ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக தெற்காசியாவில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தானில் அதிகமான ரசிகர்கள் உள்ளனர். ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டைக் காண 90 சதவீத ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

2028-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டைச் சேர்ப்பதற்கான ஒலிம்பிக் செயல் குழுவின் தலைவராக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் இயான் வாட்மோர், ஐசிசி சுயாட்சி இயக்குநர் இந்திரா நூயி, அமெரிக்க கிரிக்கெட் அமைப்பின் தலைவர் பராக் மராத்தே ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.