நாடாளுமன்ற நெறி பிறழ்ந்த சொற்கள் பட்டியல் – 2022 வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘புதிய இந்தியாவுக்கு புதிய அகராதி’ என்று தலைப்பிட்டு ஒரு ட்வீட்டைப் பகிர்ந்துள்ளார். அதில் அன்பார்லிமென்ட்டரி என்ற ஆங்கில வார்த்தைக்கு ஒரு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், அன்பார்லிமென்ட்டரி என்றால், நாட்டை பிரதமர் வழிநடத்தும் விதத்தை விவாதங்களில் மிகச் சரியாக வர்ணிக்கக் கூடிய வார்த்தைகள். ஆனால், இப்போது அவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற நெறி பிறழ்ந்த வாக்கியத்திற்கு உதாரணம்: இரட்டை நிலைப்பாடு கொண்ட சர்வாதிகாரி ஒருவர் தனது பொய்களும், தோல்வியும் வெளிச்சத்துக்கு வரும்போது சிந்தும் முதலைக் கண்ணீர்.

சர்ச்சையின் பின்னணி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 18-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், மக்களவைச் செயலர் அவை நாகரிகமற்ற வார்த்தைகள் அடங்கிய தொகுப்பை வெளியிட்டுள்ளார். அதிலுள்ள வார்த்தைகளைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்படுவதாகவும், மீறி பயன்படுத்தினால் அவைக் குறிப்பிலிருந்து அந்த வார்த்தைகள் நீக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் தடை செய்யப்பட்ட வார்த்தைகளின் பட்டியல் ஊடகங்களில் வெளியாகியுள்ளது. ஆங்கில அகர வரிசையில் அவை பட்டியலிடப்பட்டுள்ளன. 40 வார்த்தைகளும் சில சொற்றொடர்களும் அதில் இடம்பெற்றுள்ளன.

இதற்கு திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மூன்று ட்வீட்களில் அவர் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். காங்கிரஸ் சார்பில் ஜெய்ராம் ரமேஷ், பிரியங்கா காந்தி வதேரா உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தடை செய்யப்பட்டுள்ள சில இந்தி வார்த்தைகளும் அவற்றின் அர்த்தமும்: chamchagiri (துதிபாடி), chelas (வாரிசுகள்), tanashah (சர்வாதிகாரி), tanashahi (சர்வாதிகாரம்), jumlajivi, dohra charitra (இரட்டை நிலைப்பாடு), baal buddhi (சிறுப்பிள்ளைத் தனம்), Shakuni (சகுனி), Jaichand, Khalistani (காலிஸ்தானி), vinash purush (நாசக்காரன்), khoon ki kheti (ரத்ததை அறுவடை செய்பவர்), nautanki (நாடகதாரி), dindhora peetna (சுயதம்பட்டம் அடிப்பவர்), behri sarkar (காதுகேளாத அரசு) and nikamma (உதவாகரை) போன்ற இந்தி வார்த்தைகள் தடை செய்யப்பட்டுள்ளன.

‘சொற்களைக் கண்டு மக்கள் விரோத அரசுகள் அஞ்சுவது புதிதல்ல’

நாடாளுமன்ற நெறி பிறழ்ந்த சொற்கள் பட்டியலில் உள்ள சொற்கள் இல்லாமல் சட்டங்களே இயற்ற முடியாது என்று குறிப்பிட்டுள்ள மதுரை எம்.பி சு.வெங்கடேசன், “சொற்களைக் கண்டு மக்கள் விரோத அரசுகள் அஞ்சுவது ஒன்றும் புதிதல்ல. இந்தச் சொற்கள் இல்லாமல் போனால் யாரும் கவலைப்பட போவதில்லை. உங்கள் பெயர்களே போதுமானது” என்று மத்திய பாஜக அரசை விமர்சித்துள்ளார்.

மன்னராட்சி முறை நடக்கிறதா? – கமல்ஹாசன் கேள்வி

‘அன்-பார்லியமென்ட் வேர்ட்ஸ்’ பட்டியல் விவகாரம் குறித்து காட்டமாக கருத்து தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், தவறுகளை சுட்டிக்காட்டவோ, விமர்சனம் செய்யவோ இடமளிக்காதது குடியரசையும், அரசியலமைப்பையும் கேலிக்கூத்தாக்கும் என்றும், பிரதமர், அமைச்சர்களுக்கு எதிராக யாரும் பேசக்கூடாது என்று கருதுவது ஆபத்தானது என்றும் கூறியுள்ளார்.

மேலும், பாராட்டுகளை மட்டுமே கேட்டுக் கொண்டிருக்க மன்னராட்சி முறை நடக்கிறதா? ஹிட்லராக மாற இது ஜெர்மனி அல்லவே?! என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.