தமிழக அரசின் பயிர்க் கடன் தள்ளுபடிக்கான தேதியை மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கக் கோரி விவசாயிகள் இன்று திருப்பூரில் ஆர்ப்பாட்டத்தின் ஈடுபட்டனர். திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக விசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் மாநிலத் தலைவர் இரா.சண்முகசுந்தரம் தலைமை வகித்தார்.

இதில் விவசாயிகள் பேசியது: “கடந்த ஜன.14-ம் தேதி அப்போதைய எதிர்கட்சித் தலைவரும், தற்போதைய தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் திருவள்ளூவர் மாவட்டம் நத்தம் கிராமத்தில் நடந்த பொங்கல் விழாவில் பங்கேற்று, ”திமுக ஆட்சி அமைந்தால் அனைத்து விவசாயக் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும்” எனத் தெரிவித்தார். கடந்த 2 ஆண்டுகளாக விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்த நிலையில், இந்த அறிவிப்பால் கடன் சுமை வெகுவாக குறையும் என விவசாயிகள் கருதினர்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு டிசம்பர், ஜனவரி, மாதங்களில் கூட்டுறவு சங்க செயலாளர்களின் நெருக்குதல் காரணமாக, சிறு குறு விவசாயிகள் தாங்கள் பெற்ற பயிர்க்கடனை திருப்பி செலுத்தினர். அதன்பின்னர் பயிர்க்கடனை திரும்ப செலுத்திய விவசாயிகளுக்கு உடனடியாக வேறு பயிர்க்கடனை கூட்டுறவுத் துறை வழங்காமல் இருந்தனர். சில இடங்களில் விவசாயிகளுக்கு மறுகடன் வழங்கப்பட்டது. இந்த நிலையில் அப்போதைய முதல்வர் கே.பழனிசாமி, தேர்தலை முன்னிட்டு ஜன. 31-ம் தேதி வரை, ”விவசாயிகள் பெற்ற அனைத்து பயிர்க்கடன்களும் தள்ளுபடி செய்யப்படும்”’ என அறிவித்தார். இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் கடன் தள்ளுபடிக்கான தேதியை மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். கடந்த 2006 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் தமிழக அரசின் சார்பில் கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டபோது, நிதியாண்டின் இறுதிநாளான மார்ச் 31-ம் தேதி என நிர்ணயிக்கப்பட்டது. தற்போது கூட்டுறவு நகை கடன், சுய உதவிக்கடன்களுக்கு மார்ச் 31-ம் தேதி நிர்ணயிக்கப்பட்டு அரசு அறிவித்துள்ளது. அதேபோல், கூட்டுறவு சங்கத்தின் பயிர் கடனுக்கான தேதியை ஜன. 31-ம் தேதி என்பதை, மார்ச் 31-ம் தேதியாக நீட்டிப்பு செய்து, அனைத்து விவசாயிகளும் பயன்பெற ஏற்பாடு செய்ய வேண்டும். பாதிக்கப்படும் விவசாயிகளின் நிலை கருதி தமிழக அரசு இந்த முடிவை உடனடியாக எடுக்க வேண்டும்” என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்தகொண்ட விவசாயிகள் பேசினர்.

மேலும் மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி, விவசாயிகள் முழக்கங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மிழக விசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சு.முத்துவிஸ்வநாதன், மாநில ஒருங்கிணைப்பாளர் ப.செந்தில்குமார், மாநில கொள்கை பரப்பு செயலாளர் வே.சிவக்குமார், மாநில துணைத்தலைவர்கள் முத்துசாமி, அரசேந்திரன், மாநில இளைஞரணி செயலாளர் கவின்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.