ஆக்ரோஷம், ஆர்ப்பரிப்பு, பெருமகிழ்ச்சி, கூடுதல் உற்சாகம்.. விக்கெட் கிடைத்தாலோ, வெற்றி கிடைத்தாலோ கேப்டன் கோலியின் அடையாளங்களாக களத்தில் இருப்பவை

ஆனால், இவை அனைத்தும் வரும் காலங்களில் கோலியிடம் இருக்குமா என்பது விடை தெரியா கேள்வியாகத்தான் இருக்கும். ஆம், நமிபியா அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பைப் போட்டியுடன் இந்திய அணியின் டி20 போட்டிகளில் கேப்டன் பதவியிலிருந்து கோலி விலகிவிட்டார்.

இந்திய அணியில் வெற்றிகரமான கேப்டன்களில் தோனிக்கு அடுத்தார்போல், தோனி வளர்த்தபிள்ளையாக கோலி இருந்து வருகிறார்.

2016ம் ஆண்டு கேப்டன் பதவியை ஏற்ற விராட் கோலி தலைமையில் இந்திய அணி இதுவரை 50 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது, அதில் 29 போட்டிகளில் வெற்றியும், 16 ஆட்டங்களில் தோல்வியும் அடைந்துள்ளது. 4 போட்டிகளில் எந்த முடிவும் கிடைக்கவில்லை.

முன்னாள் கேப்டன் தோனிக்கு அடுத்தார்போல், அதிகமான வெற்றிகளை டி20 போட்டிகளில் பெற்ற கேப்டன் கோலிதான். தோனி 42 வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்திருந்தார்.

ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச்சுக்கு அடுத்தார்போல், கேப்டனாக இருந்து அதிகமான ரன்கள் சேர்த்ததில் 2-வது இடத்தில் கோலி இருக்கிறார். இதுவரை இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் கேப்டனாக இருந்து கோலி, 1,50 ரன்கள் சேர்த்துள்ளார், இதில்13 அரைசதங்கள் அடக்கம், சராசரியாக 47.57 ரன்கள் வைத்துள்ளார்.

நியூஸிலாந்து மண்ணில் அந்த அணிக்கு எதிராக டி20தொடரை இந்திய அணி வெல்லாமல் இருந்தது. ஆனால் 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அங்கு நியூஸிலாந்துக்கு எதிராக டி20 தொடரை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி கோலி தலைமையிலான இந்திய அணி வரலாறு படைத்தது.

விராட் கோலி கேப்டனாக இருந்து இந்திய அணிக்காக 30 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை எட்டினார்.கிரிக்கெட் உலகில் வேறு எந்தக் கேப்டனும் ஆயிரம் ரன்களை குறைந்த இன்னிங்ஸில் எட்டியதில்லை. தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக டி20 தொடரை வென்ற ஒரே கேப்டன் விராட் கோலிதான்.

கிரிக்கெட் உலகில் கடந்த தசமஆண்டுகளில் சிறந்த பேட்ஸ்மேன்கள் என எடுத்துக்கொண்டால் அதில் முதலிடம் கோலிக்கு என்பதில் சந்தேகமில்லை. விராட் கோலி சிறந்த கிரிக்கெட் வீரர், தனிவீரராக அணிக்கு வெற்றி தேடித்தரும் திறமை படைத்தவர் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

ஆனால், இந்திய அணிக்கு வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்தாரா என்பதிலும், ஐசிசி போட்டிகளில் வெற்றிகரமான கேப்டனாக இருந்தாரா என்பதில்தான் பல்ேவறு கேள்விகளை எழுப்பியன.
ஐசிசி தொடர்பான போட்டிகளில் சாம்பியன்ஷிப் எதையும் வெல்வில்லை என்ற ஒரு விமர்சனம் மட்டுமே கோலியின் கேப்டன்ஷி மீது வைக்கப்படும், மற்ற வகையில் எந்தக் குற்றச்சாட்டையும் கோலியின் தலைமையின் மீது வைக்க முடியாது.

தாதா சவுரவ் கங்குலி, தோனி எவ்வாறு பல வீரர்களை உருவாக்கி, செதுக்கினார்களோ அவர்கள் வழியில் கோலியும் பல இளம் வீரர்களுக்கு ஊக்கமளித்து உருவாக்கினார் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால், தலைமுறை மாற்றம் உருவாகும்போது, அதை ஏற்க வேண்டும் என்பது ஒப்புக்கொள்ள வேண்டும். அப்படிப்பார்த்தால், அடுத்து கேப்டனாக வரும் ரோஹித் சர்மா கோலியைவிட வயதில் மூத்தவர்தான் ஆனால் டி20 போட்டிகளில் அவரின் தலைமை பலவெற்றிகளைப் பெற்றதால், அவருக்கு அடுத்ததாக கேப்டன் வாய்ப்பு செல்லப்போகிறது.

கேப்டனாக கோலி இருந்தவரை அவரின் தலைமையிலும், பேட்டிங்கிலும் எந்தவிதமான குறையும் சொல்ல முடியாத அளவில் விளையாடினார். கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் தன்னை கோலி சமன் செய்துகொண்டார். இதுபோன்ற பக்குவத்தை அழுத்தத்தை ரோஹித் சர்மா தாங்குவாரா என்பது அவரின்தலைமை ஏற்றபின்புதான் தெரியவரும்.

அதிகமான போட்டிகள், 3 பிரிவுகளுக்கும் ஒரே கேப்டன், பேட்ஸ்மேனாக ஜொலிக்க வேண்டும், கேப்டனாக மிளர வேண்டும் என பல கடினமான சூழல்களுக்கு இடையே முள்கிரீடத்தை சுமந்துதான் கோலி களமாடினார்.

இப்போது கோலிக்கு கிடைக்கும் இந்த விடுபடுதல், நிச்சயம் அவரின் வின்டேஜ் கோலியின் ஆட்டத்துக்கு திரும்ப உதவியாக இருக்கும்.அந்த ஆட்டத்தைக் காணவே ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகிய கோலி, வெகு விரைவில் ஒருநாள் கேப்டன் பதவியிலிருந்தும் நீக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகின்றன. இனிமேல் டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டுமே கோலியின் கேப்டன்ஷியை பார்க்கப் போகிறோம்

ஐசிசி தொடர்களில் சாம்பியன்ஷிப் வெல்லாத குறைதான் கோலியின் தலைமை மீது பார்க்க முடியும். மற்றவகையில் கோலி எப்போதும் ரசிகர்களின் கிங் என்பதிலும் முடிசூடா மன்னன் கோலி…. என்பதிலும் சந்தேகமில்லை.