உத்தரப் பிரதேசம் லக்கிம்பூர் கெரி பகுதியில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது வாகனம் ஏற்றப்பட்ட வீடியோ காட்சியை காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் தங்களின் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர்.

ஆனால், இந்த வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து முழுமையாக ஆய்வு செய்யப்படாத நிலையில், பிரியங்கா காந்தி, ஆம் ஆத்மி தலைவர் சஞ்சய் சிங் ஆகியோர் தங்களின் ட்விட்டர் தளத்திலும், ராகுல் காந்தி தனது ஃபேஸ்புக் பக்கத்திலும் பகிர்ந்துள்ளனர்.

லக்கிம்பூர் கெரி பகுதியில் நடந்த போராட்டத்தில் நடந்த வன்முறையில் 8 விவசாயிகள் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்தாரைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் மூத்த நிர்வாகி தீபேந்தர் ஹூடா உள்ளிட்ட பலர் லக்கிம்பூருக்கு நேற்று இரவு சென்றனர்.

ஆனால், பிரியங்கா காந்தி சென்ற வாகனத்தை சீதாபூர் பகுதியிலேயே தடுத்து நிறுத்திய போலீஸார் அவரைக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கடந்த 28 மணி நேரமாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஆனால், அவர் மீது இதுவரை எந்தவிதமான முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்படவில்லை.

இந்நிலையில் உத்தரப் பிரதேசம் லக்னோ நகருக்கு பிரதமர் மோடி இன்று வருகை தர உள்ளார். லக்னோ அருகே இருக்கும் லக்கிம்பூர் கெரி பகுதிக்கு ஏன் பிரதமர் மோடி பயணிக்க மறுக்கிறார் எனக் கேட்டு பிரியங்கா காந்தியும், ராகுல் காந்தியும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பிரியங்கா காந்தி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “மோடிஜி, சுதந்திர தினத்தைக் கொண்டாட நீங்கள் லக்னோவுக்கு வருகிறீர்கள். ஆனால், நீங்கள் இந்த வீடியோவைப் பார்த்தீர்களா. உங்கள் அரசில் இடம்பெற்ற மத்திய அமைச்சரின் மகன் எவ்வாறு விவசாயிகளை வாகனத்தால் இடிக்கிறார் எனப் பார்த்தீர்களா. இந்த வீடியோவை தயவுசெய்து பார்த்து, இந்த அமைச்சரை ஏன் இதுவரை டிஸ்மிஸ் செய்யவில்லை, அவரின் மகன் ஏன் கைது செய்யப்படவில்லை என்பதை விளக்குங்கள்.

இந்த தேசத்துக்கு சுதந்திரம் பெற்றுத்தந்தவர்கள் விவசாயிகள். அவர்களின் மகன்கள் இந்த தேசத்தின் எல்லையைக் காக்கும் பணியில் இருக்கிறார்கள். நீங்கள் என்னைப் போன்ற தலைவர்களை எந்தவிதமான முதல் தகவல் அறிக்கையின்றி கைது செய்துள்ளீர்கள். ஆனால், அந்த அமைச்சரின் மகனை ஏன் சுதந்திரமாக அலையவிட்டீர்கள்?

லக்னோ வரும் பிரதமர் மோடி லக்கிம்பூர் கெரிக்கு வரவேண்டும். தேசத்துக்கு சுதந்திரம் பெற்றுத்தந்த, தேசத்தின் ஆன்மாவான, நமக்கு அன்னத்தை வழங்கும் விவசாயிகள் வேதனையை, வலியைக் கேட்க வேண்டும். இது உங்கள் கடமை மோடிஜி. அரசியலமைப்புச் சட்டம் அவர்களைப் பாதுகாக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி தனது ஃபேஸ்புக் பக்கத்தில், விவசாயிகள் மீது வாகனத்தை ஏற்றிய வீடியோவைப் பதிவிட்டார். அதில், “இந்த தேசத்தின் அரசியலமைப்புச் சட்டம் ஆபத்தில் இருக்கிறது. இந்த வீடியோவைப் பார்த்தபின் யாருடைய மனதும் உறுத்தாவிட்டால் மனிதநேயம்கூட ஆபத்தில் இருக்கிறது.

போராடும் விவசாயிகளை அமைச்சரின் மகன் காரை ஏற்றினால், இந்த தேசத்தின் அரசியலமைப்புச் சட்டம் ஆபத்தில் இருக்கிறது. இந்த வீடியோ வெளியான பின்புகூட அமைச்சரின் மகனை விசாரணைக்கு அழைக்கவில்லை என்றால், அரசியலமைப்புச் சட்டம் ஆபத்தில் இருக்கிறது. ஒரு பெண் தலைவர் 30 மணி நேரமாக முதல் தகவல் அறிக்கையின்றி தடுப்புக்காவலில் இருந்தால், நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் ஆபத்தில் இருக்கிறது” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.