மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இன்று ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா சுவாமி தரிசனம் செய்தார்.

ஆந்திர மாநில சுற்றுலாத் துறை மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சரும், நகரி தொகுதி எம்எல்ஏவுமான நடிகை ரோஜா இன்று மதுரைக்கு வருகை தந்தார். அதனையொட்டி இன்று காலையில் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வருகை புரிந்தார். அப்போது கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் மீனாட்சி அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி சென்று வழிபட்டார். பின்னர் பொற்றாமரைக்குளம் உள்ளிட்ட இடங்களில் கலைநுட்பங்களை வியந்து பார்த்தார். பின்னர் அம்மன் சன்னதி வழியாக வெளியே வந்து புறப்பட்டுச் சென்றார்.

அப்போது, ஆந்திர மாநில அமைச்சர் நடிகை ரோஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது: ”மதுரை மீனாட்சி அம்மன் ஆசீர்வாதத்தோடு 2 முறை எம்எல்ஏவாக ஜெயித்திருக்கிறேன். முதலில் 2013ல் வந்து மீனாட்சி அம்மனிடம் ஆசீர்வாதம் வாங்கிட்டுப்போனேன். அமைச்சரான பின்பு முதல் முறையாக வந்தது சந்தோசமாக இருக்கிறது. சுவாமி, அம்மனுக்கு பூஜை செய்துவிட்டு நகரி தொகுதிக்கு செல்கிறேன். தரிசனத்திற்குப்பின் கிடைத்த புதிய சக்தியோடும், உத்வேகத்தோடும் ஆந்திர மாநில மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு சந்தோசமாக செல்கிறேன்” என்றார்.