டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவர் ஹாக்கியில் இந்திய அணி கால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. பாட்மிண்டனில் பி.வி.சிந்து, குத்துச்சண்டையில் சதீஷ் குமார் ஆகியோர் கால் இறுதிச் சுற்றில் நுழைந்தனர். 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோம் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வியடைந்தார்.

ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்று வரும் 32-வது ஒலிம்பிக் திருவிழாவின் 7-வது நாளான நேற்று, ஆடவர் ஹாக்கியில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி நடப்பு சாம்பியனான அர்ஜென்டினாவை 3-1 என்ற கோல்கணக்கில் வீழ்த்தியது. இந்திய அணி சார்பில் வருண், விவேக் சாகர், ஹர்மான்பிரீத் சிங் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். 4 ஆட்டங்களில் விளையாடி உள்ள இந்திய அணிக்கு இது 3-வது வெற்றியாக அமைந்தது. இதன் மூலம் இந்திய அணி கால் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது.

மகளிருக்கான குத்துச்சண்டை யில் 51 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் மேரி கோம் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் 2-3 என்ற கணக்கில் கொலம்பியாவின் இங்க்ரிட் லோரெனா வலென்சியாவிடம் தோல்வி அடைந்தார். ஆடவருக்கான பாய்மரப்படகில் ஸ்கீப் 49இஆர் பிரிவில் இந்தியாவின் கே.சி.கணபதி, வருண் தக்கர் ஜோடி 5-வது சுற்றில் 16-வது இடமும், 6-வது சுற்றில் 7-வது இடமும் பிடித்தனர். ஒட்டுமொத்தமாக 76 புள்ளிகள் பெற்றுள்ள இந்திய ஜோடி 17-வது இடத்தில் உள்ளது.

மகளிருக்கான பாய்மரப்படகு லேசர் ரேடியல் பிரிவில் இந்தியாவின் நேத்ரா குமணன் 7-வது சுற்றில் 22-வது இடமும், 8-வது சுற்றில் 20-வது இடமும் பிடித்தார். ஆடவருக்கான லேசர் ஸ்டாண்டர்டு பிரிவில் இந்தியாவின் விஷ்ணு சரவணன் 7-வது சுற்றில் 27-வது இடமும், 8-வது சுற்றில் 23-வது இடமும் பிடித்தார்.

மகளிருக்கான 25 மீட்டர் பிஸ்டல் தகுதிச் சுற்றில் இந்தியாவின் மனு பாகர் 292 புள்ளிகளுடன் 5-வது இடமும் ரஹி சர்னோபாத் 287 புள்ளிகளுடன் 25-வது இடமும் பிடித்தனர். இந்த தகுதிச் சுற்றானது இரு நிலைகளை உள்ளடக்கியது. இதில் விரைவு நிலை இன்று நடைபெறுகிறது.

மகளிருக்கான பாட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து 21-15, 21-13 என்ற நேர் செட்டில் டென்மார்க்கின் மியா பிளிச்ஃபெல்ட்டை வீழ்த்தி கால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். கால் இறுதிச் சுற்றில் இன்று 4-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் அகானே யமகுச்சியுடன் இன்று மோதுகிறார் சிந்து.

ஆடவருக்கான குத்துச்சண்டையில் 91 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் சதீஷ் குமார் 4-1 என்ற கணக்கில் ஜமைக்காவின் ரிக்கார்டோ பிரவுனை தோற்கடித்து கால் இறுதிச் சுற்றில் நுழைந்தார்.

வில்வித்தையில் ஆடவருக்கான தனிநபர் ரீகர்வ் பிரிவில் இந்தியாவின் அதானு தாஸ் 6-5 என்ற கணக்கில் கொரியாவின் ஓ ஜின்-ஹைக்கை வீழ்த்தி கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். ஆடவருக்கான நீச்சலில் 100 மீட்டர் பட்டர்பிளை பிரிவில் இந்தியாவின் சஜன் பிரகாஷ் அரை இறுதிக்கு தகுதிபெறத் தவறினார்.