தமிழ் மொழியியலில் ஆளுமையாக விளங்கிய தமிழறிஞர் செ.வை.சண்முகனார்(91) நேற்று முன் தினம் இரவு காலமானார்.

தமிழ் மொழியியலின் மிகச்சிறந்த ஆளுமையாக விளங்கிய தமிழறிஞர் செ.வை.சண்முகனார், அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டசோழபுரத்துக்கு அருகில் உள்ள செங்குந்தபுரத்தில் 1932-ல் பிறந்தவர்.

சொந்த ஊரில் தொடக்கக் கல்வியையும், உயர்நிலை மற்றும் மேல்நிலை படிப்புகளை ஜெயங்கொண்டம் மற்றும் கும்பகோணத்திலும் பயின்ற சண்முகனார், கல்லூரிப் படிப்பை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்று அங்கேயே, விரிவுரையாளர், இணைப்பேராசிரியர், பேராசிரியர், இயக்குநர் உள்ளிட்ட பல நிலைகளில் பணிபுரிந்தவர்.

மொழியியல் துறையில் பல ஆய்வுகளை மேற்கொண்ட இவர், தமிழ் மரபு இலக்கணங்களை மொழியியல் நோக்கில் ஆராய்ந்துஇலக்கண உருவாக்கம், தொல்காப்பியத் தொடரியல், மொழித் தொல்லியல், எழுத்திலக்கணக் கோட்பாடு, சொல்லிலக்கணக் கோட்பாடு, பொருளிலக்கணக் கோட்பாடு, குயில் பாட்டுத் திறன்,குறள் வாசிப்பு, இக்கால எழுத்துத்தமிழ் போன்ற தமில் இலக்கண மொழியியல் குறித்த நூல்களை வழங்கியுள்ளார்.

இதுவரை 26 நூல்களையும் 200-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் வழங்கியுள்ள செ.வை.சண்முகனார், பணியில்இருந்து ஓய்வுபெற்ற பிறகு சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், புதுச்சேரி மொழியியல்பண்பாட்டு ஆய்வு நிறுவனம்,மைசூர் செம்மொழித் தமிழ் உயராய்வு நிறுவனம் ஆகியவற்றில் உயராய்வுகளை நிகழ்த்தியவர். மொழியியலுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது, ‘மொழி ஞாயிறு’ என்னும் பட்டம், குடியரசுத் தலைவரின் தொல்காப்பிய விருதாளர் என பல பெருமைக்குரிய இவருக்கு தமிழக அரசு 2014-ல் கம்பர் விருது வழங்கி கவுரவித்தது.

பணி ஓய்வுக்குப் பின்பு மனைவி தனலட்சுமியுடன் சிதம்பரம் அண்ணாமலை நகரையொட்டிய மாரியப்பா நகரில் வாழ்ந்து வந்த செ.வை.சண்முகனாரின் பவளவிழா, அவருடைய மாணவர்களால் அண்மையில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

கடந்த சில நாட்களாக உடல் நலமின்றி இருந்த இவர், நேற்று முன்தினம் இரவு காலமானார். இவரது மறைவுச் செய்தியறிந்த மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறை அலுவலர்கள் நேற்று அவரது இல்லத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினர். இவரது இறுதிச்சடங்கு இன்று காலை 8 மணியளவில் நடக்கிறது.