இந்தியா – சீன எல்லையில் கடந்த சில நாட்களாக பதற்றம் நிலவிவரும் சூழலில் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் 120 பிரளய் ஏவுகணைகள் வாங்க ராணுவத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த ஏவுகணைகள் வெகு விரைவில் தயாரிக்கப்பட்டு இந்திய – சீன எல்லையில் தயார் நிலையில் நிறுத்தப்படும் என்று பாதுகாப்பு அமைச்சக வட்டாரம் தெரிவிக்கின்றது.

முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நிலத்தில் இருந்து மற்றொரு நில இலக்கை தாக்கக்கூடிய புதிய தலைமுறை ‘பிரளய்’ ஏவுகணை 150 முதல் 500 கி.மீ. தூரம் சென்று இலக்குகளைத் தாக்கக்கூடியது. இந்த ஏவுகணை இந்திய உந்துவிசை ஏவுகணை திட்டத்தின்கீழ், பிருத்வி ஏவுகணையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகும். இது அதிநவீன மோட்டார் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் கொண்டது.

அண்மையில் கடற்படை தளபதி ஹரி குமார் பேசுகையில், “எல்லையில் எதிரிகளை எதிர்கொள்ள ஏவுகணைகளை பெருமளவில் தயாரித்து தயார் நிலையில் வைக்க மறைந்த முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் ஒரு சிறப்புத் திட்டமே வகுத்திருந்ததாக சுட்டிக் காட்டியிருந்தார்” என்று கூறியிருந்தார். இந்நிலையில்,120 பிரளய் ஏவுகணைகள் வாங்க ராணுவத்திற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

ராகுல் எச்சரிக்கை: முன்னதாக, நேற்று ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுடனான உரையாடலில் ராகுல் காந்தி, சீனாவும் பாகிஸ்தானும் இணைந்து இந்தியாவுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாம் என எச்சரித்திருந்தார். “எல்லையில் இந்தியாவின் நிலை சர்வதேச சூழலுடன் இணைக்கப்பட்டுள்ளது. எல்லையில் நிலை மாறிக் கொண்டே உள்ளது. நமக்கு இரண்டு எதிரிகள் உள்ளனர். அது பாகிஸ்தான் மற்றும் சீனா. அவர்கள் இருவரையும் தனித்தனியாக வைப்பதுதான் நமது கொள்கை.

முன்பு இரண்டு பக்கமும் போர் இருக்காது என சொல்லப்பட்டது. பின்னர் சீனா, பாகிஸ்தான், பயங்கரவாதம் என இரண்டரை பக்கமும் போர் நடைபெறலாம் என சொல்லப்பட்டது. ஆனால், இப்போது நமக்கு முன்னர் ஒரே ஒரு போர்தான். அது ராணுவம், பொருளாதாரம் என ஒன்றாக இணைந்து செயல்படும் சீனா, பாகிஸ்தான் உடனான போராக இருக்கலாம்” என அவர் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.