சென்னை: முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பெண்ணுக்கு மூட்டு அறுவை சிகிச்சை செய்யத் தாமதமின்றி அனுமதிவழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, சுகாதாரத் துறை அமைச்சருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் செந்தாமரை (58) என்பவர் வலது கால் மூட்டு அறுவை சிகிச்சைக்காக கடந்த மாதம் 3-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். அப்போது முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சைக்கு அனுமதி கிடைக்கவில்லை.

எனவே, அவர் மீண்டும் ஜன.19-ம்தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எடுக்கப்பட்ட எம்ஆர்ஐ ஸ்கேன் முடிவுகள் மற்றும் நோயாளியின் வலி ஆகியவற்றின் அடிப்படையில் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். எனினும் முதல்வரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அனுமதி அளிக்காமல் சுகாதாரத் துறையினர் தொடர்ந்து காலம் தாழ்த்தி வருகின்றனர். சுமார் 43 நாட்களாக அவர் அறுவை சிகிச்சைக்காக காத்துக் கிடக்கிறார்.

எனவே, மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு காத்துக் கிடக்கும் செந்தாமரைக்கு மூட்டு அறுவை சிகிச்சை நடைபெற காப்பீடு ஒப்புதல் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், காப்பீட்டு திட்டத்தின் கீழ் அனுமதி வழங்குவதில் ஏற்படும் தாமதத்துக்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கையை மேற்கொள்ளவும் வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.