பியூச்சர் குழும நிறுவனங்களை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்வது தொடர்பாக சிங்கப்பூர் சர்வதேச தீர்ப்பாயத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கிற்கு டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்தத் தடையை விலக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் அமேசான் நிறுவனம் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று பியூச்சர் குழுமத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பியூச்சர் குழுமத்தின் சங்கிலித் தொடர் நிறுவனங்களான பிக்பஜார் உள்ளிட்ட நிறுவனங்களை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு ரூ. 24,500 கோடிக்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது. ஒருதலைப் பட்சமான இம்முடிவை எதிர்த்து ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் வழக்கு தொடர்ந்தது. இந்த முடிவு ஏக போக வர்த்தகத்துக்கு வழிவகுக்கும் என்று நீதிமன்றத்தில் அமேசான் தெரிவித்திருந்தது.

இந்த வழக்கு குறித்து சர்வதேச தீர்ப்பாயத்தில் அமேசான் வழக்கு தொடர்ந்தது. சிங்கப்பூரில் தொடரப்பட்ட இந்த வழக்கைத் தொடரக்கூடாது என்றும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் பியூச்சர் குழுமம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் தடை விதித்தது.

தடையை விலக்கக் கோரும் மேல் முறையீட்டு மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா உள்ளிட்ட மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அமேசான் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள் பியூச்சர் குழும நிறுவனங்கள், பியூச்சர் ரீடெய்ல் லிமிடெட் (எப்ஆர்எல்), பியூச்சர் கூப்பன்ஸ் பிரைவேட் லிமிடெட் (எப்சிபிஎல்) உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். இந்த வழக்கு இம்மாதம் 23-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் தெரிவித்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக அமேசான் சார்பில் வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம் ஆஜரானார். இந்த வழக்கு தொடர்பாக நீதிபதியின் தீர்ப்பு நிலுவையில் உள்ள நிலையில் இந்த பிரச்சினை குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியானது எவ்விதம் என்று நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.

அமேசான்-பியூச்சர் குழுமம் தொடர்பான வழக்கில் கடந்த ஜனவரி 4-ம் தேதி டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இதனால் சிங்கப்பூர் தீர்ப்பாயத்தில் இந்த வழக்கு குறித்த விசாரணை நின்று போயுள்ளது.

டெல்லி உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் பியூச்சர் குழும நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்து தடை விதிக்காமல் போனால் அது சரி செய்ய முடியாத நஷ்டத்தை ஏற்படுத்திவிடும் என்பதால் தடை விதிக்கப்படுகிறது என்று தெரிவித்தது. ஜனவரி 4-ம் தேதி விதிக்கப்பட்ட இந்தத் தடை உத்தரவு அடுத்த விசாரணை வரை தொடரும் என தெரிவித்தது.

இது தொடர்பாக அமேசான்.காம் என்வி இன்வெஸ்ட்மென்ட் ஹோல்டிங்ஸ் எல்எல்சி, பியூச்சர் குழும நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

சிங்கப்பூர் தீர்ப்பாயத்தில் அமேசான் நிறுவனம் 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here