குழந்தைகளை அடிமைப்படுத்தும் ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு டெல்லியைச் சேர்ந்த நீதிபதி நரேஷ் குமார் லகா கடிதம் எழுதியுள்ளார்.

சிறுவர், சிறுமிகளை ஈர்த்த பப்ஜி என்ற ஆன்லைன் விளையாட்டு குழந்தைகளை பாதிப்பதாகவும் அந்த விளையாட்டின் போட்டிகள் குழந்தை களின் மனநலத்தை பாதிப்பதுடன் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்து வதாகவும் புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து இந்தியாவில் பப்ஜி விளை யாட்டு செயலி உட்பட 100-க்கும் மேற்பட்ட ஆன்லைன் விளையாட்டு செயலிகளுக்கு கடந்த ஆண்டு தடை விதிக்கப்பட்டது.

எனினும், ஃப்ரீ ஃபயர் போன்ற மேலும் பல விளையாட்டு செயலிகள் தடை செய்யப்படாமல் இருப்பதால் அவற்றை விளையாடும் சிறுவர்கள் அதற்கு அடிமையாகின்றனர். இந் நிலையில் இதுபோன்ற ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு டெல்லியைச் சேர்ந்த மாவட்ட கூடுதல் நீதிபதி நரேஷ் குமார் லகா கடிதம் எழுதி உள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு எழுதி உள்ள கடிதத்தில் நீதிபதி நரேஷ் குமார் லகா கூறியிருப்பதாவது:

குழந்தைகளைக் கெடுத்து அவர்களின் வளர்ச்சியை பாதிக்கும் பப்ஜி மொபைல் விளையாட்டை ஏற்கெனவே தடை செய்த உங்கள் நடவடிக்கையை நாட்டு மக்கள் பாராட்டினர். ஆனால், அதேபோன்ற ஃப்ரீ ஃபயர் மற்றும் பப்ஜி இந்தியா (பேட்டில் கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா) ஆகிய இரண்டு ஆன்லைன் விளையாட்டுக்கள் இணையதளத்தில் எளிதாகக் கிடைக்கின்றன. மேலும் பல ஆன்லைன் விளையாட்டு செயலிகளும் உள்ளன.

இவற்றை விளையாடும் குழந்தை கள் ஏற்கெனவே தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை விளையாடிய குழந்தைகளைப் போல மனதளவிலும் உடலளவிலும் பாதிக்கப்படுகின்றனர். இது எதிர்கால இளைய சமுதாயத்தை பாதிக்கும். குழந்தைகளை அடிமைப்படுத்தும் இந்த ஆன்லைன் விளையாட்டை தடை செய்ய நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இதுபோன்ற ஆன்லைன் விளையாட்டுக்களை முறைப்படுத்த புதிய சட்டம் கொண்டு வரவேண்டும். குழந்தைகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அந்தக் கடிதத்தில் நீதிபதி நரேஷ் குமார் லகா கூறியுள்ளார்.