டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் பரிந்துரையை ஏற்று வரும் 22-ஆம் தேதி (புதன்கிழமை) டெல்லி மேயர் தேர்தலை நடத்தலாம் என்று துணைநிலை ஆளுநர் வி.கே.சக்ஸேனா ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

இதன்படி டெல்லி மேயர், துணை மேயர், மாநகராட்சி நிலைக்குழுவின் 6 உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் 22-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. முன்னதாக, இன்று காலை முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஆளுநருக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அதில் ,மேயர் தேர்தல் தேதியை அவர் பரிந்துரைத்திருந்தார். அதனையொட்டி இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டெல்லி மாநகராட்சியில் மொத்தமுள்ள 250 இடங்களுக்கு கடந்த டிசம்பரில் தேர்தல் நடைபெற்றது. இதில், ஆம் ஆத்மி 134 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பெற்றது. பாஜக 104 இடங்களுடன் இரண்டாமிடம் பெற்றது. இந்நிலையில், மேயர் தேர்தலுக்கு முன் 10 நியமன உறுப்பினர்களை துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா நியமித்தார். இதன் மூலம் டெல்லி மாநகராட்சியை பாஜக கைப்பற்ற முயற்சிப்பதாக ஆம் ஆத்மி குற்றம்சாட்டியது.

இதனால் மாமன்ற கூட்டத்தில் ஆம் ஆத்மி – பாஜக உறுப்பினர்கள் இடையே ஏற்பட்ட மோதலால் கடந்த 2 மாதங்களில் மேயர் தேர்தல் 3 முறை ஒத்திவைக்கப்பட்டது. டெல்லி மேயர் தேர்தல் தொடர்பாக ஆம் ஆத்மி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று (பிப்.18) பிறப்பித்த உத்தரவில், “மேயர் தேர்தலில் நியமன உறுப்பினர்கள் வாக்களிக்க முடியாது. மேயர் தேர்தலுக்கு பிறகு அவரது தலைமையிலான கூட்டத்தில் துணை மேயர் தேர்வு செய்யப்பட வேண்டும்” என்று கூறியது. தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வந்ததையடுத்து ஆளுநருக்கு தேர்தல் தேதியை அரசு பரிந்துரைக்க, தற்போது ஆளுநரும் இசைவு தெரிவித்துள்ளார்.