அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவதைத் தொடர்ந்தே காசி, மதுராவில் கோயில்களின் உரிமைக் குரல் எழுந்துள்ளன என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். கோயில் மசூதி சர்ச்சை தொடர்பான வழக்குகள் பல எழுந்துள்ள நிலையில் யோகி ஆதித்யநாத் கூறியுள்ள இக்கருத்து கவனம் பெறுகிறது.

லக்னோவில், பாஜக மாநில செயற்குழு கூட்டம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் பேசி யோகி ஆதித்யநாத், “உத்தரப் பிரதேசத்தில் மதக் கலவரங்கள் இல்லை. மாநிலத்தில் ராம நவமி, ஹனுமன் ஜெயந்தி பண்டிகைகள் அமைதியாகக் கொண்டாடப்பட்டுள்ளன. மாநிலத்தில் முதன்முறையாக ரம்ஜானுக்கு முந்தைய கடைசி வெள்ளிக்கிழமை தொழுகையை சாலைகளில் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வழிபாட்டுக்கு என்று மசூதி இருக்கும்போது ஏன் தொழுகையை சாலையில் நடத்த வேண்டும்?

பிரதமர் மோடியின் தொலைநோக்கு திட்டத்தால் காசி விசுவநாதர் கோயிலுக்கு அன்றாடம் 1 லட்சம் பேர் வருகின்றனர். வழிபாட்டுத் தலங்களில் இருந்து ஒலிப்பெருக்கிகள் அகற்றப்பட்டுள்ளன. இதனால் தேவையில்லாத சத்தம் அடங்கியுள்ளது. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஆயத்தமாகுமாறு கட்சித் தொண்டர்களை வலியுறுத்துகிறேன். தேர்தலில் 75 இடங்களில் பாஜக வெற்றி பெற வேண்டும்.

ராமர் கோயில் கட்டப்பட்ட பின்னர் தான், காசி, மதுராவின் பிருந்தாவனம், விந்தியவாசினி தம், நைமிஷ் தம் ஆகியனவற்றின் உரிமைக் குரல் எழுந்துள்ளது.

கரோனா காலத்தில் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் தான் 2022 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு அமோக வெற்றி கிடைத்துள்ளது. இது தொடர, மக்களாவை தேர்தலிலும் எதிரொலிக்க தொண்டர்கள் உழைக்க வேண்டும். 2017க்குப் பின்னர் உத்தரப் பிரதேசத்தின் நிலைமை மாறிவிட்டது. இப்போது நாட்டில் 40க்கும் மேற்பட்ட திட்டங்களை செயல்படுத்துவதில் உத்தரப் பிரதேசம் முன்னிலை வகிக்கிறது” என்றார்.

மதுரா வழக்கு: மதுராவில் கிருஷ்ணர் பிறந்த இடமாகக் கருதப்படும் இடத்தில் உள்ள கேசவ் தேவ் கோயிலை கிருஷ்ண ஜென்மஸ்தான் சேவா சன்ஸ்தாவும், அதன் அருகிலுள்ள மசூதியை ஷாஹி ஈத்கா நிர்வாகக் குழுவும் நிர்வகித்து வருகின்றன. கிருஷ்ணஜன்ம பூமி இடம் மொத்தம் 13.37 ஏக்கரில் அமைந்துள்ளது.

கடந்த 1968-ம் ஆண்டில், கோயிலும், மசூதியும் அருகருகில் மதநல்லிணக்கத்தை போற்றும் வகையில் இவ்விரு அமைப்புகளும் ஒப்பந்தம் செய்து கொண்டன. இந்த ஒப்பந்தம் தற்போதும் செயல்பாட்டில் உள்ளது.

இச்சூழலில் அந்த ஒப்பந்தம் தவறான காரணங்களுக்காக போடப்பட்டதாக கூறி அயோத்தி வழக்கின் தீர்ப்பிற்கு பின் வழக்குகள் தொடுக்கப்பட்டு வருகின்றன.

கியான்வாபி வழக்கு: உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டியுள்ள கியான்வாபி மசூதி சுவரில் சிங்கார கவுரி அம்மனை தினமும் தரிசிக்க உத்தரவிட கோரி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18-ல் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில், கோயிலை ஒட்டியுள்ள கியான்வாபி மசூதியில் களஆய்வு நடத்த சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் மசூதி நிர்வாகத்தினர் வழக்கு தொடர்ந்தனர். இதில், வழக்கை வாராணாசி மாவட்ட சிவில் நீதிமன்றத்திற்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இப்போது அந்த வழக்கு நடந்து வருகிறது.