ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும்” என்று முதல்வர் ஸ்டாலினிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேரில் வலியுறுத்தினார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் இன்று (ஜன.7) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேரில் சந்தித்து புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்தார். அப்போது, ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்றும், தஞ்சாவூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் செயல்படும் ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகள் பெயரில் வாங்கிய கடன் வலையிலிருந்து விவசாயிகளை விடுவிக்க தமிழக அரசு, வங்கி நிர்வாகங்கள் மற்றும் ஆலை நிர்வாகத்தோடு பேசி தீர்வு காண வேண்டும் என்றும் கோரிக்கைகளை வலியுறுத்தினார்.

மேலும், ‘தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தொடர்ந்து தமிழக அரசுக்கும், தமிழக மக்களுக்கும் விரோதமாகவும், பழமைவாத சனாதன கருத்துகளையும், அரசியல் சாசனத்திற்கும் முரண்பாடாக பேசி வருவது தொடர்ந்து கொண்டுள்ளார். தமிழக ஆளுநராக இருந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிரான முறையில் செயல்பட்டு வருகிறார். புதிய கல்விக் கொள்கையை அமலாக்குவது, தமிழக அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்க மறுப்பது, குறிப்பாக, நீட் விலக்கு, ஆன்லைன் ரம்மி மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்து கிடப்பில் போட்டுள்ளார். மேலும், நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்நாடு பெயரை பயன்படுத்துவது தவறு என பேசியுள்ளது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது’ என்று எதிர்ப்பு உணர்வுகளை தெரியப்படுத்தினார்.

முன்னதாக, சேகுவேராவின் புதல்வியார் அலெய்டா குவேராவும் மற்றும் அவரது மகள் பேராசிரியர் ஸ்டெஃபானி ஆகியோருக்கு சென்னையில் 18-ம் தேதி நடைபெறவுள்ள வரவேற்பு விழாவிலும், கன்னியாகுமரி மாவட்டத்தின் தோள்சீலைப் போராட்டத்தின் 200-வது ஆண்டு விழாவிலும் முதல்வர் கலந்துகொள்ள வேண்டும் எனறு அழைப்பிதழ்களை வழங்கினார்.