டெங்கு காய்ச்சல் இப்போது கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் 340 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (20-10-2021) சைதாப்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 174வது வார்டு மடுவின்கரை, பாரதி நகர், பாரதி தெருவில் ரூ.30 லட்சம் செலவில் நவீன உபகரணங்களுடன் கூடிய உடற்பயிற்சிக் கூடத்தைத் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சிக்குப் பிறகு அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ”2020-2021ஆம் நிதி ஆண்டில் 174வது வார்டு மடுவின்கரை, பாரதி நகர் பாரதி தெருவில் உள்ள இளைஞர்களின் கோரிக்கையை ஏற்று, சைதாப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.30 லட்சம் செலவில் நவீன உடற்பயிற்சி உபகரணங்களுடன் உடற்பயிற்சிக் கூடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்னும் கூடுதலாக ரூ.2 லட்சம் செலவில் உபகரணங்கள் தேவையெனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அக்கோரிக்கை 2021- 2022ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கி, தேவையான உபகரணங்கள் வாங்கிக் கொடுக்கப்படும்.
டெங்கு காய்ச்சல் இப்போது கட்டுப்பாட்டில் இருக்கிறது. 340 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சுகாதார அலுவலர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அதோடு மட்டுமல்லாமல் வீடுகளுக்குச் சென்று அங்கு டெங்கு வராமல் தடுப்பதற்காக தேங்கி இருக்கிற தண்ணீரை அகற்றுவது, தினந்தோறும் கொசு மருந்து தெளிப்பது, புகை மருந்து அடிப்பது, அபேத் தெளிப்பது, லார்வாக்களை அழிப்பது போன்ற செயல்களைச் செய்து வருகின்றனர்.
பண்டிகைக் காலங்களில் தன்னார்வலர்கள் வந்தால் உள்ளாட்சி நிர்வாகத்திலும், காவல்துறை நிர்வாகத்திலும் இணைத்து வைப்போம்” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல அலுவலர் திருமுருகன், பகுதிச் செயலாளர் இரா.துரைராஜ், எம்.கிருஷ்ணமூர்த்தி, வட்டச் செயலாளர்கள் நேருநகர் எஸ்.பாட்சா, எஸ்.ஆர்.செந்தில் உள்ளிட்ட ஏராமானோர் கலந்துகொண்டனர்.