மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தைப் போல மக்களைத் தேடி பல் மருத்துவம் என்னும் மருத்துவ சேவையை வழங்க உள்ளதாகவும் இதில் பள்ளி மாணவர்களும் பயன்பெறுவர் எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் இன்று (18-10-2021) சென்னை பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

’’சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரியில், பல் மருத்துவ சேவைக்கென்று சென்னை மாநகருக்குப் புதிதாக ஒரு வாகனம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இரண்டு இருக்கைகள் கொண்ட இந்த வாகனத்தில் இரண்டு மருத்துவர்கள் மற்றும் இரண்டு செவிலியர்கள் இடம்பெற்றிருப்பார்கள். இவர்கள் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் சென்னையின் பல்வேறு இடங்களுக்குச் சென்று மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தைப் போல மக்களைத் தேடி பல் மருத்துவம் என்கிற வகையில் மருத்துவ சேவையை வழங்க உள்ளனர்.

வரும் நவம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிற நிலையில், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர்களின் அனுமதியைப் பெற்று, பள்ளி மாணவர்களுக்கும் இந்த பல் மருத்துவ சேவையை வழங்க இருக்கின்றனர். இன்று முதல் இந்த பல் மருத்துவ சேவை வழங்கும் பணி தொடங்குகிறது.

கடந்த 2006-2011ஆம் ஆண்டு வரை சென்னை மாநகராட்சியில் திமுக நிர்வாகத்தில் இருந்தபோது, சென்னையின் பல்வேறு இடங்களுக்கு பல் மருத்துவ சேவை வழங்கப்பட்டது. அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பல் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு, தேவையான பல் மருத்துவ உபகரணங்களும் இலவசமாக வழங்கப்பட்டன. கடந்த 15 ஆண்டுகளாக அந்தத் திட்டம் செயல்பாட்டில் இல்லை. இப்போது தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி இத்திட்டம் மீண்டும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தால் சென்னை மாநகர மக்கள் மட்டுமல்ல. பள்ளி மாணவர்களும் பயன்பெற இருக்கின்றனர். இத்திட்டம் எந்த வகையில் பயன்படுகிறது என்று அறிந்தபிறகு கூடுதல் வாகனங்கள் வாங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

தமிழகத்தில் இரண்டு பல் மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. ஒன்று சென்னை பல் மருத்துவக் கல்லூரி. மற்றொன்று சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உள்ள பல் மருத்துவக் கல்லூரியாகும். எந்ததெந்த மாவட்டங்களில் எல்லாம் பல் மருத்துவக் கல்லூரி தேவை இருக்கிறது என்று கண்டறிந்து, முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச்சென்று அவற்றை நிறைவேற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்’’.

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.