திருவனந்தபுரம்: கேரளாவில் புதிய வகை வைரசான நோரா வைரஸ் தாக்குதல் தொடங்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த 1-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. திருவனந்தபுரத்தை அடுத்த விழிஞம் பகுதியில் உள்ள தொடக்க பள்ளிக்கு சென்ற சில மாணவர்கள் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்டனர். இதில் சிலருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், சிறுவர்களின் ரத்த மாதிரியை பரிசோதனைக்கு அனுப்பினர். பரிசோதனை முடிவில் 2 மாணவர்களுக்கு புதிய வகை நோரோ வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து மாணவர்கள் இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

கேரளாவில் ஏற்கனவே பறவை காய்ச்சல், பன்றி காய்ச்சல் என நோய்கள் பரவி வந்த நிலையில் இப்போது புதிய வகை நோரோ வைரஸ் பரவி இருப்பது சுகாதார துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நோரோ வைரஸ் பாதித்தவர்களுக்கு வாந்தி மயக்கம், தலைவலி, காய்ச்சல், அடி வயிற்றில் வீக்கம் போன்றவை ஏற்படும். வாந்தி மற்றும் வயிற்று போக்கு அதிகமானால் நீரிழப்பு ஏற்படும். இதனால் உடல் பலவீனம் அடைந்து நோய் பாதிப்பு அதிகரிக்கும். நோரோ வைரஸ் பாதிப்புக்கு ஆளானவர்களிடம் தொடர்பில் இருப்போருக்கும் இந்த நோய் பரவ வாய்ப்பு உள்ளது. நோயாளிகளின் வாந்தி மற்றும் அவர்களின் உமிழ் நீர் மூலமும் நோய் பரவ வாய்ப்பு உள்ளது. நோரோ வைரஸ் பாதிப்பை தடுக்க சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். குறிப்பாக சுத்தமான தண்ணீரை நன்றாக காய்ச்சி குடிக்க வேண்டும்.

கிணறுகள் மற்றும் தொட்டிகளை பிளீச்சிங் பவுடர் மூலம் சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும். பழங்கள், காய்கறிகளை நன்கு கழுவிய பின்பே பயன்படுத்த வேண்டும். கைகளை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என சுகாதார துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். கேரளாவில் தற்போது பரவி வரும் புதிய வகை நோரோ வைரஸ் குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என்று கூறப்பட்டு உள்ளது. தற்போது மேலும் 5 மாணவர்களுக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் ரத்த மாதிரிகளும் பரிசோதனைக்கு அனுப்பபட்டுள்ளது. அதன் முடிவுகள் வந்த பிறகே இவர்களுக்கும் நோரோ வைரஸ் பாதிப்பு உள்ளதா? என்பது தெரியவரும்.