பசும்பொன் தேவர் ஜெயந்தி விழா பாதுகாப்பு பணியில் சிறப்பாக ஈடுபட்ட போலீஸாருக்கு டிஜிபி சைலேந்திர பாபு பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வாழ்த்து கடிதத்தில் டிஜிபி கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பசும்பொன் தேவர் ஜெயந்தி விழா கடந்த 30-ம் தேதி நடைபெற்றது. சட்டம் – ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாமரைக் கண்ணன் மேற்பார்வையில், தெற்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க், மதுரை காவல் ஆணையர் செந்தில் குமார் ஆகியோர் பாதுகாப்பு பணிகளை வழிநடத்தினர்.

ராமநாதபுரம் டிஐஜி மயில் வாகனன் மற்றும் 24 மாவட்ட எஸ்.பி.க்கள் உட்பட 10 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவின்போது சிறு அசம்பாவிதம்கூட நடக்காமல் பாதுகாப்பு பணியை திறம்பட முடித்துள்ளீர்கள்.

இதன்மூலம் தமிழக காவல் துறைக்கு பெருமை சேர்த்துள்ளீர்கள். பாதுகாப்பு பணியில் நாட்டுக்கே உதாரணமாக இருந்துள்ளீர்கள். மிகுந்த ஈடுபாடு, உற்சாகம், அர்ப்பணிப்பு உணர்வுடன் கடமையாற்றிய அனைத்து அதிகாரிகள், போலீஸாருக்கும் எனது பாராட்டுகள். இவ்வாறு அதில் டிஜிபி தெரிவித்துள்ளார்.