நான்கு மணிநேரம் வரை ‘பிளாங்க்’ செய்து எங்களை பிரம்மிக்க வைத்துள்ளார் என வியந்து பாராட்டினார் தந்தை லட்சுமணன்.

தமிழக காவல்துறை இயக்குனர் சைலேந்திர பாபு அவர்களின் தன்னம்பிக்கை பேச்சால் கவரப்பட்ட, சென்னை ஆவடியைச் சேர்ந்த 8ஆம் வகுப்பு படித்து சிறுவன் சுபாஷ், ‘பிளங்க்’ உடற்பயிற்சியை தொடர்ந்து 4 மணிநேரம் செய்து லிம்கா கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

சென்னை ஆவடியை சேர்ந்தவர் 41 வயதான லட்சுமணன் ஓய்வு பெற்ற ராணுவ வீரர், இவரின் மனைவி ஹேமலதா, தனியார் கல்லூரி விரைவுரையாளராகப் பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியரின் மகன் சுபாஷ், 13 வயதான இவர் ஆவடியில் உள்ள சி.ஆர்.பி.எப். கேந்திரியா வித்தியாலயா பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர், முழங்கைகள் மற்றும், கால் பெருவிரலையும் ஊன்றி உடலை சமநிலையில் நிலைப்படுத்தி செய்யக்கூடிய ‘பிளாங்க்’ உடற்பயிற்சியில் அதிக ஆர்வம் காட்டியுள்ளான்.

இதையறிந்த அவரின் தந்தை, அவருக்கு பிரத்யேக பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்துள்ளார். இந்நிலையில் சுபாஷ் ‘பிளாங்க்’ உடற்பயிற்சியை நீண்ட நேரம் செய்து அசத்தியுள்ளார். இதற்கு உறுதுணையாக ஆவடியில் உள்ள சி.ஆர்.பி.எஃப். தலைவர் தினகரன் அவர்கள் லிம்கா உலக சாதனை செய்ய ஏற்பாடு செய்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கௌரவித்தார். பெற்றோர்கள் முன்னிலையில் லிம்கா உலக சாதனை நிகழ்ச்சியை ஆவடி, சி.ஆர்.பி.எப்., கூட்ட அரங்கில் சுபாஷ் பிளாங்க் உடற்பயிற்சியில் உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டார்.

இதுகுறித்து சுபாஷின் தந்தை லட்சுமணன் கூறுகையில், “தமிழக காவல் துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு அவர்களின் தன்னம்பிக்கை பேச்சால் கவர்ந்த சிறுவன், அவரின் விளையாட்டு திறமைகளைக் கண்டு தானும் இதுபோன்ற விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறினார்.

மேலும், இந்த உடற்பயிற்சியில் வெளிநாட்டை சேர்ந்த 62 வயது முதியவர் ஒருவர் 8 மணி நேரம் 1 நிமிடம் உடலை சமநிலையில் வைத்து உலக சாதனை படைத்தார். அதன் பின்னர், மும்பையைச் சேர்ந்த 21 வயது பெண் 2 மணி நேரம் உடலை சமநிலையில் வைத்து சாதனை படைத்தார். தற்போது என் மகன் இந்த பயிற்சியில் சாதனை படைக்க முயன்றுள்ளார் என்று கூறினார் லட்சுமணன்.

அத்துடன், வீட்டில் நான்கு மணிநேரம் வரை ‘பிளாங்க்’ செய்து எங்களை பிரம்மிக்க வைத்துள்ளார் எனவும் தன் மகனை வியந்து பாராட்டினார் லட்சுமணன்.