திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் நேற்று டிஜிபி சைலேந்திர பாபு, தன் குழுவினருடன் சைக்கிள் பயணம் மேற்கொண்டார்.

தமிழக டிஜிபி சைலேந்திர பாபு நேற்று சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட பகுதிகள் வழியாக திருவள்ளூர் மாவட்ட பகுதிகளான திருமழிசை, வெள்ளவேடு, அரண்வாயல், மணவாளநகர் பகுதிகளில் உடற்பயிற்சிக்காக தன் குழுவினருடன் சைக்கிள் பயணம் மேற்கொண்டார்.

அப்போது, திருவள்ளூர் அருகே புதுச்சத்திரம் பகுதியில் சாலையோர கரும்பு ஜூஸ் கடையில், டிஜிபி சைலேந்திர பாபு கரும்பு ஜூஸ் வாங்கி குடித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

தமிழக காவல் துறை சைக்கிள் வீரர்களுடன் ஞாயிற்றுக்கிழமைகளில் 100 கிமீ தூரத்துக்கு சைக்கிளிங் செய்து வருகிறேன். உடற்பயிற்சி செய்வதன் மூலம் அலுவலகப் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள முடியும். ஆகவே, நான்கு மணி நேரம் சைக்கிளிங் செய்வது, அடுத்த 12 மணி நேரத்துக்கு திறம்பட உழைக்க பயனுள்ளதாக இருக்கும்.

சாலையோரங்களில் விற்பனை செய்யப்படும் கரும்பு ஜூஸ் உள்ளிட்ட இயற்கை உணவுகளை சாப்பிடுவது உடல் நலத்துக்கு நல்லது. தற்போது இளைய தலைமுறையினர் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். செய்தித்தாள்கள் வாசித்தல், உடற்பயிற்சி மேற்கொள்ளுதல் பிற்காலத்தில் காவல்துறையில் பயிற்சி மேற்கொள்ள பயனுள்ளதாக இருக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.