‘தி கிரே மேன்’ படத்தின் அடுத்தடுத்த பாகங்களில் நடிகர் தனுஷ் நடிக்க உள்ளதாகவும், அவருக்கென தனி பின்கதை ஒன்று உள்ளதாகவும் படத்தின் இயக்குநர்களான ருஸ்ஸோ சகோதரர்கள் தெரிவித்துள்ளனர். அது மட்டுமின்றி நடிகர் தனுஷும் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.

‘கேப்டன் அமெரிக்கா’, ‘அவெஞ்சர்ஸ்’ போன்ற படங்களை இயக்கியதற்காக பொதுவெளியில் பரவலாக அறியப்படுபவர்கள் ஜோ ருஸ்ஸோ, அந்தோனி ருஸ்ஸோ. இவர்கள் இருவரும் ‘ருஸ்ஸோ சகோதரர்கள்’ என இவர்கள் பிரபலமாக அறியப்படுகிறார்கள். நாவலை அடிப்படையாகக் கொண்டு இவர்கள் இயக்கிய ‘தி கிரே மேன்’ திரைப்படம் அண்மையில் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியானது.

ரையான் கோஸ்லிங், கிறிஸ் எவன்ஸ், அனா டி அர்மாஸ் உள்ளிட்ட ஹாலிவுட் நடிகர்களுடன் நடிகர் தனுஷும் படத்தில் நடித்திருந்தார். படத்தில் தனுஷின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. ஆனால், ரசிகர்களிடையே தனுஷுக்கு குறைந்த காட்சிகள் மட்டுமே வைக்கப்பட்டிருந்தது சற்று அதிருப்தியைக் கொடுத்தது. இந்நிலையில், ‘தி கிரே மேன்’ படத்தின் அடுத்தடுத்த பாகங்களில் தனுஷ் வருவார் என்றும், அவருக்கு தனியே கதையிருப்பதாகவும் படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் அவர்கள் அளித்த பேட்டி ஒன்றில், ”தனுஷை பயன்படுத்துவது எங்கள் அதிர்ஷ்டம். படத்தில் நாயகனால் வெற்றிக்கொள்ளப்படும் ஒரு கதாபாத்திரமாக தனுஷை நடிக்க வைப்பதில் எங்களுக்கு விருப்பமில்லை. படத்தின் நாயகன் கோஸ்லிங்கைப் போலவே திறமையும் உறுதியும் கொண்டது தனுஷின் கதாபாத்திரம். ஒருகட்டத்தில் அவரை மீண்டும் கதைக்குள் வர அனுமதிக்கும் ஒரு கதை தனுஷுக்கு உள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.

இதனிடையே நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தி கிரே மேன் பிரபஞ்சம் விரிவடைகிறது. அதன் தொடர்ச்சி வர இருக்கிறது. லோன் வோல்ஃப் தயாராக உள்ளது. நீங்கள்?” என கூறி வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் ‘தி கிரே மேன்’ படத்தின் அடுத்த பாகம் வர உள்ளதும், அதில் தனுஷ் நடிக்க இருப்பதும் உறுதியாகியுள்ளது.