ஐபிஎல் 2021 போட்டிகள் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டதையடுத்து சக சிஸ்கே வீரர்கள் அதாவது வெளிநாட்டு உள்நாட்டு மற்ற வீரர்கள் பாதுகாப்பாக வீடு போவதை உறுதி செய்த பிறகு தான் விமானத்தில் ஏறுவேன் என்று சிஎஸ்கே கேப்டன் தோனி கூறியுள்ளார்.

இதனால்தான் தோனி உலகின் மரியாதைக்குரிய கிரிக்கெட் வீரராகக் கருதப்படுகிறார். இந்த முறை தன் அணியின் சக வெளிநாட்டு, உள்நாட்டு வீரர்கள் பாதுகாப்பாக தங்கள் ஊர் போய் சேர்ந்த பிறகே தான் விமானத்தில் கால்பதிப்பேன் என்று கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தோனி பற்றி எத்தனையோ பாசிட்டிவ் ஆன உத்வேகம் தரும் செய்திகளை நாம் படித்திருப்போம். இப்போது ஆங்கில நாளேடு ஒன்று தோனி மற்ற சிஎஸ்கே வீரர்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து தனது பயணத்தை ஒத்திப்போட்டுள்ளதாக செய்தி வெளியிட்டு அனைவரையும் தோனியின் மீதான மதிப்பை அதிகரிக்குமாறு செய்துள்ளது.

சிஎஸ்கே உறுப்பினர் ஒருவர் அந்த ஆங்கில நாளேட்டில் கூறும்போது, “தான் கடைசியாக விடுதியிலிருந்து வெளியே வருவேன் என்று தோனி கூறிவிட்டார். முதலில் வெளிநாட்டு வீரர்கள் பாதுகாப்பு எய்த வேண்டும் என்று அவர் விரும்புகிறார். பிறகு இந்திய வீரர்கள் பாதுகாப்பாக ஊர் திரும்ப வேண்டும் என்றார். அனைவரும் தங்கள் ஊர்களுக்கு பாதுகாப்பாக சென்ற பிறகு தான் ராஞ்சிக்கான விமானத்தை இன்று பிடிப்பதாக தெரிவித்தார் தோனி” என்று கூறியுள்ளார்.

இந்தக் கொரோனா காலத்தில் அனைவரும் தங்கள் சொந்தபந்தங்களை, குழந்தைகளைப் பார்க்க ஆர்வமாக இருக்கும் போது தோனி அனைவரது பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்து விட்டு கடைசியாக தன் ஊருக்கான விமானத்தைப் பிடிக்கிறார் என்பது அவர் மீதான மதிப்பை, மரியாதையை பலரிடத்திலும் அதிகரித்துள்ளது.

வெளிநாட்டு வீரர்களைப் பாதுகாப்பாக அவர்கள் ஊருக்கு அனுப்புவது பிசிசிஐக்கு ஒரு பெரிய சவாலாக அமைந்துள்ளது. ஆஸ்திரேலிய வீரர்கள் அங்கே செல்ல தடையிருப்பதால் மற்ற நாட்டு வீரர்கள் சொந்த நாடு திரும்பி விட்டனர். புதனன்று சிஎஸ்கே அணியின் இந்திய உறுப்பினர்கள் பல்வேறு இடங்களில் இறக்கிவிடப்பட்டுள்ளனர்.

டெல்லியிலிருந்து ராஜ்கோட், பெங்களூரு, மும்பை, சென்னைக்கு தனி விமானத்தை சிஎஸ்கே ஏற்பாடு செய்தது. தோனி இன்றுதான் விமானத்தில் தன் ஊருக்குச் செல்கிறார்.

மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் தங்கள் வீரர்களுக்கு தனிவிமானம் ஏற்பாடு செய்ய ராஜஸ்தான், கொல்கத்தா, ஹைதராபாத் அணி தங்கள் வீரர்களுக்கு பயணிகள் விமானத்தை ஏற்பாடு செய்துள்ளது.