புதுச்சேரி: சொகுசு கப்பல் புதுச்சேரியில் நிற்பதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளதா என்று சுற்றுலாத் துறை அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: ”புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, ஓராண்டு காலத்தில், தேர்தல் வாக்குறுதிகளையும், சட்டப்பேரவையின் அறிவிப்புகளையும், முழுமையாக நிறைவேற்றி வருகிறது.

மின்துறை தனியார் மயமாக்கல் போன்ற மத்திய அரசின் திட்டங்களை, வேறு வழியின்றி செயல்படுத்தும் போதும், மக்களுக்கு பாதிப்பில்லாத பல்வேறு திட்டங்களை செயல்படுத்த அரசு அறிவிப்புகளை வெளியிடும் போதும், திமுக – காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள், பொய் கருத்துகளை தெரிவித்து, மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

புதுச்சேரி அரசு செயல்படுத்த வேண்டிய குறைந்தபட்ச திட்டங்களான சுகாதாரம், சுற்றுப்புறச் சூழல், கல்வி, குடிசையில்லா மாநிலம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் அரசு தீர்க்கமான நடவடிக்கை எடுத்து, இந்த அரசு எதை நோக்கி செல்கிறது என்பதை விளக்கும் வகையில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கட்சித் தலைவர்களுடன், முதல்வர் கலந்துரையாட வேண்டும். இதனால், அரசு மீது வீண் குற்றச்சாட்டுகள் கூறுவதை தடுத்து நிறுத்த முடியும்.

 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடல் வழி மார்க்கமாக சென்னை-புதுச்சேரி இடையே இயங்கும், சூதாட்டம் நடைபெறும் தனியார் சொகுசு கப்பலை தொடங்கி வைத்துள்ளார். இந்தக் கப்பல் சம்பந்தமான பல்வேறு விமர்சனங்கள் உள்ளன. இந்தக் கப்பல் புதுச்சேரி கடலில் நிற்பதற்கு புதுச்சேரி அரசு அனுமதி வழங்கியுள்ளதா? அப்படி அனுமதி வழங்கியிருந்தால் அந்தக் கப்பல் நிற்க கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதா?

அவ்வாறு இருந்தால், அந்தக் கப்பல் நிற்பதற்கு உரிய சாத்தியக் கூறுகள் உள்ளனவா என்று தெரியவில்லை. இதனை, புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும். சூதாட்டம் விளையாடும் கப்பலாக இருந்தால், இதற்கு அனுமதி வழங்கக் கூடாது. சுற்றுலா கப்பலாக இருந்தால் அனுமதிக்கலாம்.

தமிழகத்தில் திமுக அரசின் குறைகளை சுட்டிக்காட்டி பாஜக எதிர்த்து வருகிறது. ஆனால், புதுச்சேரி பாஜக, திமுகவினரின் தவறுகளை சுட்டிக்காட்டாமல் மென்மை போக்கை கடைபிடிக்கிறது. கடந்த ஆட்சியில், புதுச்சேரி பிப்டிக் வாரியத் தலைவராக திமுக அமைப்பாளர் ஆர்.சிவா இருந்த போது, பல முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. அதுதொடர்பாக புகார்அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

முன்னாள் முதல்வர் நாராயணசாமி, ஆதரமின்றி முதல்வர், அமைச்சர்கள் மீது ஊழல் புகார்களை தெரிவிக்கிறார். உண்மையெனில் அதற்கான ஆதாரங்களை வெளியிட வேண்டும். பொய் தகவல்களை கூறுவதை திமுகவும், காங்கிரஸும் நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்றார்.