சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு தமிழகத்தில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினரைச் சந்தித்து ஆதரவு கோரினார். திரவுபதி முர்முவுக்கு அதிமுக தலைமை நிலையச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரவுபதி முர்மு அறிவிக்கப்பட்டார். தமிழகத்தில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினரின் ஆதரவைப் பெற இன்று சென்னை வந்த, திரவுபதி முர்முவை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் விமான நிலையத்தில் வரவேற்றனர்.

இதனைத் தொடர்ந்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து திரவுபதி முர்மு ஆதரவு கோரினார். இதில் அதிமுக, பாமக, தேமுதிக, தமாக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

ஓபிஎஸ், இபிஎஸ் தனித்தனியே வாழ்த்து: குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரவுபதி முர்மு வருகையையொட்டி, இந்த நிகழ்ச்சி நடைபெறும் தனியார் ஹோட்டலுக்கு அதிமுகவின் தலைமை நிலையச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வந்திருந்தனர்.

முன்னதாக, எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், தம்பிதுரை, பொன்னையன், கே.பி.முனுசாமி,உள்ளிட்ட இபிஎஸ் ஆதரவாளர்கள், குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் எடப்பாடி பழனிசாமி பேசியது: “தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில், இந்திய குடியரசுத் தலைவர் பதவிக்கு வேட்பாளராக போட்டியிடும் திரவுபதி முர்முவுக்கு அதிமுக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் முழுமையான ஆதரவுடன் திரவுபதி முர்மு இமாலய வெற்றி பெற துணை நிற்போம். இந்த குடியரசுத் தலைவர் தேர்தலில், போட்டியிடும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை முதல்வர் ஸ்டாலின் ஆதரிக்கவில்லை. திரவுபதி முர்முவை ஆதரிக்காமல், சமூக நீதி என பேசி மக்களை தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏமாற்றி வருகிறார். திமுக காங்கிரஸ், சூழ்ச்சியால் 2012 குடியரசுத் தலைவர் தேர்தலில் பி.ஏ.சங்கமா வெற்றி பெற முடியவில்லை” என்று அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரவுபதி முர்மு, “யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கனியன் பூங்குன்றனார் மற்றும் பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்ற பாரதியாரின் பாடலையும் மேற்கோள் காட்டி பேசினார். நவீன இந்தியாவில் இந்த ஆண்டு மிகவும் முக்கியமானது . நம் நாட்டின் 75-ம் ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளோம். நாட்டின் முதல் குடிமகனை தேர்ந்தெடுக்கும் தேர்தல் இந்த மாதம் 18-ம் தேதி நடைபெற உள்ளதை நீங்கள் அறிவீர்கள். இந்தத் தேர்தலில் உங்கள் சகோதரியான எனக்கு ஆதரவளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன், சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ஓபிஎஸ் ஆதரவு: பின்னர், குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரவுபதி முர்முவை அதிமுக பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், அவரது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட ஓபிஸ் ஆதரவாளர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.