பயிற்சி மருத்துவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதைக் கண்டித்து சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பயிற்சி மருத்துவர்கள் கடந்த 5 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தின் மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள பயிற்சி மருத்துவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ. 25 ஆயிரம்வழஙகப்படுகிறது.ஆனால், சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் பயிற்சிமருத்துவர்களுக்கு அத்தொகைவழங்கப் படுவதில்லை.பிறமருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு இணையாக பணிச்சுமையை எதிர்கொள்ளும் தங்களுக்கும் அதே தொகையை வழங்க வலியுறுத்தி, அங்குள்ள பயிற்சி மருத்துவர்கள் கடந்த 5 நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

5 வது நாள் போராட்டத்தை ஒடுக்கும் விதமாக பல்கலைக்கழக நிர்வாகம் நேற்று அதிகாலை 5 மணிக்கு பயிற்சி மருத்துவர்கள் தங்கியிருக்கும் விடுதியில், ‘11 மணிக்குள் விடுதியைக் காலி செய்ய வேண்டும்’ என்ற அறிவிப்பை ஒட்டினர். இதற்கு பயிற்சி மருத்துவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிடக் கோரி பயிற்சி மருத்துவர்களிடம் சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி, அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் ராம கதிரேசன், பதிவாளர் சீதாராமன், மருத்துவக்கல்லூரி முதல்வர்ரமேஷ், சிதம்பரம் டிஎஸ்பிரமேஷ் ராஜ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில் உடன்பாடு ஏற்படாத நிலையில் மாணவர்கள் விடுதி வளாகத்தின் முன் தட்டேந்தி, உணவு கேட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தங்களது கோரிக்கையான ரூ 25 ஆயிரம் ஊக்கத் தொகையை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பயிற்சி மருத்துவர்களில் சத்தியப் பிரியா, கம்பதாசன் ஆகியோர் கூறுகையில்,“இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 25 வருடங்களுக்கு முன்பு பயிற்சி மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட ரூ 3 ஆயிரத்தை அரசு மருத்துவக் கல்லூரியாக மாற்றப்பட்ட பின்பும் வழங்கி வருகிறார்கள்.

அதுவும் கடந்த 8 மாதங்களாக வழங்கப்படவில்லை” என்று வருத்தத்துடன் தெரிவித்தனர்.

“கரோனா காலங்களில் சிறப்பாகப் பணியாற்றி 40 பேர்தொற்றால் பாதிக்கப்பட்டிருக் கிறோம். பயிற்சி மருத்துவர்களின் நலன் கருதி தமிழக முதல்வர் இதில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று போராட்டத்தில் பங்கேற்ற பயிற்சி மருத்துவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அதுவரையிலும் தங்களது போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.