தமிழகத்தில் ரூ.799 கோடிக்கு சத்துமாவு கொள்முதல் செய்வதுதொடர்பான டெண்டர் அறிவிப்புக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் அனைத்துமாவட்டங்களில் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு சத்துமாவு கொள்முதல் செய்வதற்கான டெண்டர் அறிவிப்பை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட இயக்குநர் கடந்த 7-ம் தேதி வெளியிட்டார்.

இதை எதிர்த்து கர்நாடக மாநிலத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: தமிழக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட இயக்குநர் வெளியிட்ட டெண்டர் அறிவிப்பில், ‘டெண்டரில் பங்கேற்கும் நிறுவனம், கடந்த 3 ஆண்டுகளில் ஆண்டுக்கு ரூ.20 கோடிஅளவுக்கு சத்துமாவு விநியோகம் செய்திருக்க வேண்டும். ஐஎஸ்ஓதரச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்’ என்பன உள்ளிட்டபல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

புதிய டெண்டர் அறிவிப்பு: இது, சிறிய நிறுவனங்களை டெண்டரில் பங்கேற்க விடாமல் தடுக்கும் விதமாக உள்ளது. எனவே,இந்த டெண்டர் அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும். கடுமையான நிபந்தனைகளை தளர்த்தி புதிய டெண்டர் அறிவிப்பை வெளியிட உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த மனு, நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், ‘‘ரூ.799 கோடி மதிப்பில் சத்துமாவு கொள்முதல் செய்ய வெளியிடப்பட்ட இந்த டெண்டரில், குழந்தைகளுக்கு சத்துமாவு தடையில்லாமல் விநியோகம் செய்வதை உறுதி செய்வதற்காகதான் இதுபோன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டன’’ என்றார்.

நிபந்தனைகள் அவசியம்: இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, குழந்தைகளுக்கான உணவின் தரம், பாதுகாப்பு கருதி இந்த நிபந்தனைகள் அவசியம் என தெரிவித்து, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.