தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொடர் நான்கு நாட்கள் விடுமுறை காரணமாக சொந்த ஊரில் தீபாவளி கொண்டாட சென்னையில் இருந்து தென் மாவட்டத்தை நோக்கி மக்கள் அதிகமாக சென்றனர். இதனால், செங்கல்பட்டை அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சுமார் 2 கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த 30 காவலர்கள், 80 சுங்கச்சாவடி ஊழியர்கள் பணியில் ஈடுபட்டனர்.

மேலும், சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் வழக்கமாக 6 பூத்தில் செல்லும் வாகனங்கள், தீபாவளி பண்டிகைக்காக 8 பூத்தில் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும்அதிக அளவிலான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் வாகனங்களுக்கு கட்டணம் இல்லாமல் செல்ல மாவட்ட ஆட்சியர் ஆ.ர. ராகுல்நாத் ஏற்கெனவே வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் தொடர்ந்து சென்னை மற்றும் புறநகரில் இருந்து தென் மாவட்டத்தை நோக்கி அதிகமான வாகனங்கள் பரனூர் சுங்கச்சாவடியை கடந்து சென்றன. மேலும் கடந்த 2 நாட்களாகவே வண்டலூர், தாம்பரம், குரோம்பேட்டை, கூடுவாஞ்சேரி, மறை மலைநகர், சிங்கப்பெருமாள் கோவில், செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி ஆகிய இடங்களில் கடும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனிடையே செங்கல்பட்டை அடுத்த இறுகுன்றப்பள்ளி அருகேசென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் முன்னே சென்ற விலையுயர்ந்த கார் மீது பின்னால் வந்த தனியார் பேருந்து மோதியதில் அடுத்தடுத்து 4 கார்கள் விபத்துள்ளாகின.

இதில் யாருக்கும் காயம் இல்லை என்றாலும், இந்த விபத்தால் இறுகுன்றப்பள்ளி முதல்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வளாகம் எதிரே உள்ள மேம்பாலத்தை கடந்து 2 கிமீ தூரம் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.