9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடுவதாக, அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

புதிதாகப் பிரிக்கப்பட்ட வேலூர், நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற வேண்டும். இம்மாவட்டங்களுக்கு செப்.15-க்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், 9 மாவட்டங்களுக்கு 2 கட்டங்களாக அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என, மாநில தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது.

வேட்புமனுத் தாக்கல் நாளை மறுநாள் (செப்.15) தொடங்கி செப்.22-ம் தேதி வரை நடைபெறும். 23-ம் தேதியன்று வேட்பு மனுக்கள் ஆய்வு செய்யப்படும். 25-ம் தேதி அன்று வேட்பு மனுவைத் திரும்பப் பெறலாம். வேட்பு மனுக்கள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பெறப்படும்.

இந்நிலையில், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடுவதாக, அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக, விஜயகாந்த் இன்று (செப். 15) வெளியிட்ட அறிவிப்பு:

“தமிழகத்தில் நடைபெற இருக்கும் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடுகிறது. போட்டியிட விரும்புகின்ற அனைத்து நிர்வாகிகளும், தேமுதிக தொண்டர்களும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் விருப்ப மனுக்களை 16.09.2021, 17.09.2021 இரண்டு நாட்கள் காலை 10.00 மணியில் இருந்து அந்தந்த மாவட்ட தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுவை பெற்று, பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை அந்தந்த மாவட்ட தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிகவின் சார்பில் போட்டியிடுவதற்குரிய விருப்ப மனு அளிப்பதற்கு தேமுதிகவின் நிர்வாகிகளாக இருப்பவர்களும், தேமுதிகவின் அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்களும் தகுதியானவர்கள்.

கட்டணத் தொகை:

மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் – 4,000 ரூபாய்.

ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் – 2,000 ரூபாய்”.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.