தொழில்நுட்ப நிறுவனங்கள் நாடி வந்து தேர்வுசெய்யக்கூடிய முதல் நகரமாக சென்னையை மாற்றிக் காட்டிய ஆட்சி திமுக ஆட்சிதான் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்திற்கான சர்வதேச கருத்தரங்கு (CII CONNECT 2021) மாநாஇன்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில், நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், தகவல் தொழில் நுட்பத்துறையின் செயலாளர் நீரஜ் மிட்டல், இந்திய மென்பொருள் தொழில்நுட்பப் பூங்கா (STPI) இயக்குநர் டாக்டர் சஞ்சய் தியாகி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் தமிழக முதவ்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, “

இன்றைய உலகத்தையே ஆட்சி செய்வது ஓரெழுத்து மந்திரம்தான். அதுதான் ‘e’ என்பதாகும். அந்த ஓரெழுத்து மந்திரத்துக்காக நடைபெறக்கூடிய மாநாடு இந்த மாநாடு. எது இல்லாமல் வேண்டுமானாலும் வாழ்ந்துவிடலாம் -ஆனால் இண்டர்நெட் இல்லாமல் யாரும் வாழ முடியாது, இருக்க முடியாது என்ற ஒரு சூழ்நிலை இப்போது ஏற்பட்டிருக்கிறது. தொழில்நுட்பத்தின் கட்டுப்பாட்டுக்குள் நாம் வந்துவிட்டோம்.

கல்வித்துறை, போக்குவரத்துத் துறை, பொறியியல் துறை, மருத்துவத் துறை, பொழுதுபோக்குத் துறை, வங்கித் துறை, பாதுகாப்புத் துறை – இப்படி எந்தத் துறையாக இருந்தாலும் அது தகவல் தொழில்நுட்பத் துறையைச் சார்ந்தே இயங்க வேண்டும் என்ற ஒரு சூழல் ஏற்பட்டிருக்கிறது. எனவே இதை ஒரு துறையின் மாநாடாகப் நாம் பார்க்க முடியாது. அனைத்துத் துறைகளினுடைய மாநாடாக இதை நாம் கருதிட வேண்டும்.

இந்த மாநாட்டைப் பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியாகவும் பெருமிதமாகவும் இருக்கிறது. தகவல் தொழில்நுட்பத் துறையின் சார்பில் நடைபெறக்கூடிய இந்த இரண்டு நாள் மாநாட்டை ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் இதில் கருத்துகளை வழங்க இருக்கிறார்கள். உலகின் பல்வேறு நாடுகளைச் சார்ந்த நிறுவனங்கள் இந்த இரண்டு நாள் கண்காட்சியில் பங்கெடுத்ததிருக்கின்றன.

கருத்துரை வழங்கவிருக்கக்கூடிய முக்கியமான பேச்சாளர்களின் பட்டியலைப நான் பார்த்தேன். இவை அனைத்தையும் பார்க்கும்போது, எனக்கு 1996-ஆம் ஆண்டுதான் நினைவுக்கு வருகிறது. தகவல் தொழில்நுட்பம் என்பது அரும்பாக வளர்ந்த காலத்தில் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தவர் கலைஞர் கருணாநிதி.

அப்போது நான் சென்னை மாநகரத்தினுடைய மேயராக இருந்தேன். தகவல் தொழில்நுட்பத்தைக் கழக ஆட்சியின் மிக முக்கியக் குறிக்கோளாக மாற்றி, 1996-ஆம் ஆண்டு ஆட்சியின்போது தகவல் தொழில்நுட்பப் புரட்சியைச் செய்தவர்தான் அன்றைய முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி. IT Professionals என்று சொல்லக்கூடிய தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஏராளமாக உருவாகக் காரணமாக இருந்தவர் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நாடி வந்து தேர்வுசெய்யக்கூடிய முதல் நகரமாக சென்னையை மாற்றிக் காட்டிய ஆட்சி திமுக ஆட்சி. தகவல் தொழில்நுட்பத்துக்காக, தனித் துறையை 1998-ஆம் ஆண்டு உருவாக்கிய ஆட்சியும் திமுக ஆட்சிதான்.

கலைஞர் அவர்களின் தலைமையில், IT Task Force என்ற அமைப்பு அன்று உருவாக்கப்பட்டது. அரசுத் துறையைக் கணினிமயமாக்கினார். பள்ளிக்கல்வியில் தகவல் தொழில்நுட்பத்தை இணைத்தார்.

இந்தச் சாதனைகளுக்கான சாட்சிதான் இன்று தரமணியில் கம்பீரமாகக் காட்சியளிக்ககக்கூடிய டைடல் பார்க் என்பதை யாரும் மறந்ததுவிட முடியாது. 24 ஆண்டுகளுக்கு முன்னால் 340 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அந்த டைடல் பார்க் கட்டப்பட்டது. சென்னை தரமணி முதல் மாமல்லபுரம் வரை இருக்கக்கூடிய சாலையை ஐ.டி. சூப்பர் ஹைவே சாலையாக மாற்றி அமைத்த ஆட்சியும் கலைஞர் தலைமையில் இருந்த திமுக ஆட்சிதான்.

தமிழ்நெட் என்ற இணையக் கருத்தரங்க மாநாட்டினை 1999-ஆம் ஆண்டு நடத்தியிருக்கிறோம். உலகத் தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தை அமைத்தோம். அரசு மேனிலைப் பள்ளிகளில் கணினி மையம் தொடங்கினோம். 1996-க்கு முன்னால் தமிழ்நாட்டில் இருந்த மென்பொருள் நிறுவனங்களின் எண்ணிக்கை 34. திமுக அரசின் ஐந்தாண்டு காலத்தில் அதன் எண்ணிக்கை 666 ஆக மாறியது. இத்தகைய சாதனையைத் தமிழ்நாட்டில் நிகழ்த்திக் காட்டிய ஆட்சிதான் கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சி.

இன்று இத்தகைய மாநாட்டை நடத்துகிறோம் என்றால், அதற்கு 25 ஆண்டுகளுக்கு முன்னால் அடித்தளம் அமைத்த ஆட்சிதான் திமுக ஆட்சி. அதனால்தான் பெருமிதமாக இருக்கிறது, பூரிப்பாக இருக்கிறது, மகிழ்ச்சியாக இருக்கிறது என்று நான் குறிப்பிட்டுச் சொன்னேன்.

இது தகவல் தொழில்நுட்ப யுகம் ஆகும். கண்டுபிடிப்புகளின் காலமாகும். தகவல் தொழில்நுட்பம்தான் இன்று காலத்தைச் சுழல வைத்துக் கொண்டு இருக்கிறது. கணினி அறிவியலும் – தகவல் தொழில்நுட்பமும் இல்லாமல் எதுவும் இல்லை என்ற ஒரு சூழல் உருவாகி இருக்கிறது. ஒரு மாநிலத்துக்கு மிகப்பெரிய முன்னேற்றங்களையும் முதலீடுகளையும் கொண்டு வருவதில் தகவல் தொழில்நுட்பத் துறைதான் முன்னணி வகிக்கிறது. தேவையையும் – தொலைநோக்குப் பார்வையையும் – அதன் மூலமாக வளர்ச்சியையும் – வேலை வாய்ப்பையும் அதிகரிப்பதாக இந்த மாநாடு அமைய வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை.

இந்தத் துறையில் புதிய முதலீட்டாளர்களுக்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். பயன்படுத்தப்படக்கூடிய தொழில் நுட்பங்கள் புதியதாக மாற வேண்டும். புதிய திறன்கள் உருவாக வேண்டும். அந்த அடிப்படையில் ஏராளமான வேலை வாய்ப்புகள் உருவாகி, தனிமனிதர்களையும் நிறுவனங்களையும், அதன் மூலமாக மாநிலத்தையும், நாட்டையும் பரவலாக வளர்ப்பதற்கு அது அமைய வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள மனித வளத்தை, அறிவுச் சக்தியாக பயன்படுத்திக் கொள்ளத்தக்க உங்களது நிறுவனங்களை வடிவமைக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். படித்தவர்கள், பட்டம் பெற்றவர்கள் என்பதோடு நிற்காமல் – அறிவாளிகளும் திறமைசாலிகளுமே இதற்குத் தேவை. அத்தகைய திறமைசாலியான, கூர்மையான அறிவுத்திறன் படைத்த இளைஞர்களாகத் தமிழ்நாட்டு இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு கூடுதலான திறன் பயிற்சிகள் கொடுத்து அவர்களை உங்கள் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு இருக்கிறது. உலக அளவில் கவனத்தை ஈர்க்கக்கூடிய மாநிலமாகவும் தமிழ்நாடு இருக்கிறது.

* தகவல் தொழில் வன்பொருள் உற்பத்தி

* மென்பொருள் உற்பத்தி

* செல்போன் உற்பத்தி

* அடிப்படைத் தேவையான மின்னணுவியல்

* கணினி உற்பத்தி

* கணினித் தயாரிப்புக்குத் தேவையான பொருள்கள்

– என அனைத்திலும் முழுமையான அடித்தளம் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. நாட்டிலேயே மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதி செய்யும் முக்கிய மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. இந்தியாவின் மொத்த எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியில் 16 விழுக்காட்டைச் சார்ந்தது தமிழ்நாடு. கணினி, மின்னணுவியல் மற்றும் ஆப்டிகல் தயாரிப்புகள் தயாரிப்பில் இந்தியாவில் 2-ஆவது இடத்தில் இருக்கிறோம். எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் இந்தியாவில் 3-ஆவது இடத்தில் இருக்கிறோம்.

உற்பத்தித் திறனின் வலுவான முதுகெலும்பில் தமிழ்நாடு இந்தியாவின் மின்னணு உற்பத்திச் சேவை மையமாகவும் உருவெடுத்திருக்கிறது. தகவல் தொழில்நுட்பத் துறையில் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்தி, முதல் இடத்தைத் தக்கவைத்துக் கொள்ளவும், மேம்படுத்தவும் தமிழ்நாடு அரசு தீவிரமாக முயற்சி செய்துகொண்டிருக்கிறது.

டேட்டா சென்டர்களை அமைப்பதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. டேட்டா சென்டர்களில் முதலீடுகளைச் செயல்படுத்துவதற்கு ஒரு கொள்கை அறிக்கையை இன்று நாம் வெளியிட்டிருக்கிறோம். அதேபோல், தரவுகளை அடிப்படையாகக் கொண்ட கொள்கை வடிவமைத்தலில், மாநிலத்தின் திறனை மேம்படுத்தக்கூடிய நோக்கத்தோடு, சென்னை கணிதவியல் கழகத்துடன் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்திலே கையொப்பம் இட்டுள்ளதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

வளர்ந்து வரும் தொழில்துறை மற்றும் நகர்ப்புற நடவடிக்கைகளுக்கு ஏற்ப மாநிலத்தின் உட்கட்டமைப்பை மேம்படுத்த, புறவழிச்சாலைகள், சென்னை மெட்ரோ இரயில் விரிவாக்கம் மற்றும் புதிய விமான நிலையம் போன்ற குறிப்பிடத்தக்க உட்கட்டமைப்புத் திட்டங்களை எங்கள் அரசு முன்னெடுத்து வருகிறது. தகவல் தொழில்நுட்பத் துறைகளில் வளர்ந்து வரக்கூடிய தொழில்நுட்பங்களைத் தமிழ்நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன். மேலும், தொழில்களுக்குத் தேவையான அனைத்து ஆதரவையும் தமிழ்நாடு அரசு வழங்கும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.

வேளாண்மை, உற்பத்தி, சேவைத் துறைகள் என, ஒவ்வொரு துறையிலும் தொழில்நுட்பத்தின் தேவைகள், தொழில்நுட்பத்தின் பங்கு ஆகியவை அதிகம் இருக்கும்; இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு விரும்புகிறது.

நவீன ஒற்றைச் சாளர முறை மூலமாக எளிதாக வணிகம் செய்வதை மேம்படுத்த எங்கள் அரசு பல சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டின் அனைத்து ஊராட்சிகளிலும் அகன்ற அலைவரிசை இணையவசதியை ஏற்படுத்துவதற்காக, இந்திய அரசின் பாரத்நெட் திட்டம், மாநிலத்தின் 12,525 கிராம ஊராட்சிகளையும் குறைந்தபட்சம் 1 GBPS அதிவேக இணைப்புடன் இணைக்கச் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால், அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும் தரமான டிஜிட்டல் சேவைகள், இணையவழிக் கல்வி, டெலிமெடிசின் மற்றும் டிரிபிள்-ப்ளே சேவைகள் கிடைக்கும். அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு அதிவேக இணைய சேவைகள் கிடைக்கும். இதன் மூலமாக, கிராமப்புறங்கள் வளர்ச்சி அடையும். எங்களின் புதிய கொள்கைகள் மற்றும் முன் முயற்சிகள் தமிழ்நாட்டை சர்வதேசத் தகவல் தொழில்நுட்ப மையமாக மாற்றும் என்று நான் நம்புகிறேன்.

மாநிலத்தின் பொருளாதாரம் மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்குத் தடையாக உள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதில் தொழில்துறையுடன் இணைந்து செயல்படுவோம். தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறையானது நமது லட்சியமான 1 டிரில்லியன் டாலர் இலக்கை அடைய உதவும் என்பதையும், இந்த முன்னேற்றத்தில் கனெக்ட் மிகவும் வலுவான பங்கை வகிக்கும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். CONNECT 2021 மாபெரும் வெற்றியடைய வாழ்த்தி விடைபெறுகிறேன்”

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.