கரோனா வைரஸின் உருமாற்றமான ஒமைக்ரான் தொற்றை சாதாரண ஜலதோஷம் போன்று கருத வேண்டாம், அதை எளிதாக எடுக்கவேண்டாம் என்று நிதி ஆயோக்கின் மருத்துவக் குழு உறுப்பினர் மருத்துவர் வி.கே.பால் எச்சரித்துள்ளார்.

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து, 3வது அலை வீரியமடைந்து வருகிறது. நாள்தோறும் லட்சக்கணக்கில் மக்கள் கரோனாவில் பாதி்க்கப்பட்டு வருகிறார்கள், ஒமைக்ரான் பாதிப்பும் 4 ஆயிரத்துக்கும்மேல் அதிகரித்துவிட்டது.

ஒமைக்ரான் பாதிப்பு லேசான அறிகுறிகளுடன் இருக்கும், பெரிதாக பாதிப்பு இருக்காது என்ற மருத்துவ வல்லுநர்கள் கருத்தால், பெரும்பாலான மக்கள் 3-வது அலையை எளிதாக எடுத்துக்கொண்டு தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றத் தவறிவிடுகின்றனர்.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் நிதி ஆயோக்கின் மருத்துவக் குழு உறுப்பினர் மருத்துவர் வி.கே.பால் நேற்று நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

அதிவேகமாகப் பரவக்கூடிய ஒமைக்ரான் வைரஸ், டெல்டா வைரஸுக்கு மாற்றாக பரவி வருகிறது. ஒமைக்ரான் வைரஸை சாதாரண ஜலதோஷம் போன்று நினைக்க வேண்டாம். இயல்பாக பெருந்தொற்று தன்னை விரிவுபடுத்தவும், உருமாற்றம் அடையவும் நீண்டகாலம் எடுக்கும். ஆனால், இந்த முறை விரைவாக இருக்கிறது, அதற்கு காரணம் பரவல் வேகம் அதிகரிப்புதான்

அதனால்தான் கரோனாவில் பாதி்க்கப்பட்டு பாசிட்டிவ் ஆகும் நபர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. 25 சதவீதம், 30 சதவீதம், 60 சதவீதம் வரை பாசிட்டிவ் விகிதம் என நகர்ப்புறங்களில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தேசிய அளவில் 11சதவீதம் பாசிட்டிவ் வீதம் இருக்கிறது. ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் வீதம் குறைவாக இருக்கிறது, ஆனால், பாதிப்பு அதிகமாக இருக்கிறது

ஆதலால், மக்கள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும், தடுப்பூசி செலுத்துவதால், பரவும்வேகம் குறையும். கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து கடைபிடித்து, தொற்றைக் குறைப்பது ஒவ்வொருவரின் சமூகக் கடமை. ஒவ்வொருவரும் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக விலகலைக் கடைபிடிக்க வேண்டும், தகுதியானவர்கள் தடுப்பூசி செலுத்த வேண்டும். தடுப்பூசிதான் கரோனாவிலிருந்து பாதுகாப்பு அளி்க்கும்.

இவ்வாறு வி.கே.பால் தெரிவித்தார்