நிலக்கரி விநியோகம் அதிகரித்து வருகிறது, தேவைக்கேற்ப நிலக்கரி கிடைக்கும் என்று நாடுமுழுவதுக்கும் உறுதியளிக்க விரும்புகிறோம் என மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கூறினார்.

நாட்டில் உள்ள 135 நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களில் நாட்டின் மின் தேவையில் சுமார் 70% வரை மின் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. கரோனா ஊரடங்குக்கு பிறகு நாட்டில் தொழிற்சாலைகளில், நிறுவனங்களில் மின் தேவை ஜெட் வேகத்தில் உயர்ந்தததால் இருப்பில் இருந்த நிக்கரி மின் உற்பத்தி நிலையங்களுக்கு அதிகஅளவு சென்று விட்டது.

இது தவிர சீனாவிலும் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டதால் வெளிநாட்டு நிலக்கரி நிறுவனங்களுக்கு கிராக்கி அதிகமானதால் விலையை தாறுமாறாக உயர்த்தின. இதனால் வெளிநாட்டில் இருந்தும் இறக்குமதி செய்ய முடியாமலும், உள்நாட்டிலும் நிலக்கரி இல்லாமலும் இந்தியா சிக்கி தவிக்கிறது.

கடந்த சில வாரங்களாக நிலக்கரிக்கு பெரும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆனால் மின்உற்பத்தி நிலையங்களின் தேவைகளை சந்திக்கும் அளவுக்கு போதிய அளவு நிலக்கரி உள்ளதாகவும், இதனால் மின்சார விநியோகம் பாதிக்கப்பட வாய்ப்பில்லை எனவும் நிலக்கரி அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. இதுகுறித்து மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கூறியதாவது:

நாடுமுழுவதும் தேவைப்படு்ம் நிலக்கரி விநியோகத்தை தொடர்ந்து செய்து வருகிறோம். கடந்த காலங்களில் நிலுவைகள் இருந்தபோதிலும் தொடர்ந்து நிலக்கரி விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதுமட்டுமின்றி மாநிலங்களும் தங்களது பங்குகளை அதிகரிக்குமாறு கோரியுள்ளோம். நிலக்கரி பற்றாக்குறை இருக்காது. இதனை உறுதியாக கூறுகிறோம். யாரும் பீதியடைய வேண்டாம். இந்தியாவில் தற்போது 22 நாட்கள் நிலக்கரி கையிருப்பு உள்ளது. இதுமட்டுமல்லாமல் நிலக்கரி விநியோகமும் அதிகரித்து வருகிறது. தேவைக்கேற்ப நிலக்கரி கிடைக்கும் என்று நாடுமுழுவதுக்கும் உறுதியளிக்க விரும்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.