வீடுகளில் மின் விபத்தை தவிர்க்க பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து கோவை மின்வாரிய செயற்பொறியாளர் ம.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: ஐஎஸ்ஐ முத்திரையுள்ள மின்சார வயரிங் பொருட்கள் மற்றும் மின் சாதனங்களையே பயன்படுத்த வேண்டும். எக்ஸ்டென்ஷன் பவர் கார்டை தற்காலிக உபயோகங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். நிரந்தர உபயோகம் எனில் நிரந்தர வயரிங் மேற்கொள்ள வேண்டும். எப்போதும் ஈரமாக உள்ள இடங்களில் சுவிட்ச், பிளக் பாயிண்ட்களை பொருத்தக்கூடாது. பழுதடைந்த சுவிட்ச், பிளக் பாயிண்ட்களை உடனடியாக மாற்ற வேண்டும்.

ஒரு நிலையான பிளக் பாயிண்ட்டில் மல்டி பின் பிளக் பாயிண்ட்களை பொருத்தி, அதில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் சாதனங்களை இணைப்பதால் அந்த மின்பாதையில் அதிக பளு ஏற்பட்டு வெப்பம் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும்.

செல்போன், டிவி, குளிர்சாதன பெட்டி, கணினி போன்ற மின் சாதனங்கள் பயன்பாட்டில் இல்லாதபோது மின் துண்டிப்பு செய்ய வேண்டும். சுவிட்ச், பிளக் பாயிண்டுகளை குழந்தைகள் கைகளுக்கு எட்டாத உயரத்தில் பொருத்தவேண்டும். வீட்டில் பயன்படுத்தும் யுபிஎஸ் மற்றும் பேட்டரிகளை படுக்கை அறை மற்றும் காற்றோட்டம் இல்லாத அறைகளில் வைக்கக்கூடாது. யுபிஎஸ் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள பேட்டரிகளால் ஏற்படும் மின் விபத்துகளை தவிர்க்க உரிய கால இடைவெளியில் பராமரிக்க வேண்டும். மின் உபகரணங்கள் மற்றும் மின் சாதனங்கள் அதிக வெப்பம் அடைவதை தவிர்க்க, காற்று சுழற்சி உள்ள இடங்களில் வைக்க வேண்டும். சமையல் அறையில் உள்ள மின் சாதனங்களின் சுவிட்சை ஆன் செய்யும் முன்னர், சமையல் எரிவாயு கசிவு ஏதேனும் உள்ளதா? என்பதனை உறுதி செய்த பின்னரே இயக்க வேண்டும்.

பிளக்குகளை சாக்கெட்டுகளில் இருந்து அகற்றும்போது பிளக்குடன் இணைக்கப்பட்டுள்ள வயரை பிடித்து இழுக்காமல், பிளக்கை பிடித்து அகற்ற வேண்டும். மின் சாதனங்களால் ஒருவருக்கு மின் விபத்து ஏற்பட்டால், அந்த மின் சாதனத்தையோ அல்லது விபத்து ஏற்பட்டவரையோ தொடக்கூடாது. உடனடியாக மெயின் சுவிட்ச்களை ஆஃப் செய்ய வேண்டும்.

மெயின் சுவிட்ச் போர்டுகளில் உள்ள ப்யூஸ் கேரியர்களில் பயன்படுத்தப்படும் மின்கம்பியை வரையறுக்கப்பட்ட மதிப்பீட்டி லேயே பயன்படுத்த வேண்டும். வீட்டுக்கு அருகில் உள்ள மின் கம்பங்கள் மற்றும் இழுவை கம்பிகளில் வளர்ப்பு பிராணிகளை கட்டுவதோ அல்லது பந்தல் அமைக்கவோ கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.