தான் வசிக்கும் வீட்டு உரிமையாளரின் மகளையே காதலித்ததால் அந்த வீட்டிலிருந்து வெளியேற்றப்படுகிறார் அருண் (உதயநிதி ஸ்டாலின்). தன் நண்பனுடன் சேர்ந்து வீடு தேடி அலையும் அவர் இறுதியாக வாடகை வீடு ஒன்றை கண்டுபிடிக்கிறார். அந்த வீட்டில் தங்கியிருக்கும் சோமு (பிரசன்னா) இன்னும் சில நாட்களில் வீட்டை காலி செய்துவிடுவார் என தெரிந்த பின் வீட்டில் குடியேற சம்மதிக்கிறார் அருண். அன்றிரவு பார் ஒன்றில் சோமு, ஜகன் (சதீஷ்) இணைந்து மது அருந்திக்கொண்டிருக்க, அருண் தன் காதலியிடம் தொலைபேசியில் பேசுவதற்காக வெளியே செல்கிறார். அப்போது தடுப்பு ஒன்றில் மோதி காரை ஓட்ட முடியாமல் தவிக்கும் பெண் ஒருவருக்கு உதவி செய்ய, அந்த உதவி அருணுக்கு எப்படி பிரச்சினையாக மாறுகிறது? அந்தப் பெண் யார்? தான் எதிர்கொண்ட சிக்கலில் அருண் எப்படி மீண்டார்? – இதுதான் திரைக்கதை.

தன்னைச் சுற்றியிருப்பவர்களை கண்மூடித்தனமாக நம்புவதன் ஆபத்தையும், CBh4 எனப்படும் திரவத்தின் முக்கியத்துவத்தையும், அதன் மதிப்பையும் அடையாளப்படுத்தியதில் படத்தின் மையக்கதை சுவாரஸ்யமாகவே இருக்கிறது. அதையொட்டி எழுதப்பட்டுள்ள படத்தின் முதல் பாதியின் முதல் 15 நிமிடங்கள் ‘கண்ணை நம்பாதே’ பட படக்குழுவை நம்பலாமா என்ற அளவில் கிஞ்சித்தும் சிரிப்பு வராத ஒன்லைன்கள், காதல், லவ் சாங்ஸ் என சோதிக்கிறது.

படம் அதன் த்ரில்லர் திரைக்கதையை நோக்கி முன்னேறும்போது, அடுத்தடுத்து நடக்கும் கொலைகளும், நாயகனை சூளும் பிரச்சினைகளும் காட்சிகளில் விறுவிறுப்பு கூட்டுகின்றன. சித்து குமாரின் பின்னணி இசை நிறைய இடங்களில் கதைக்கு தேவையான பரபரப்பை கூட்டி, படம் கோரும் உணர்வுக்கு கச்சிதம் சேர்ப்பது பலம்.

பெரும்பாலும் இரவில் நகரும் படத்தின் முதல் பாதி திரைக்கதை சோர்வின்றி கடக்கிறது. ஆனால், அந்த சோர்வு இரண்டாம் பாதியில் சில இடங்களில் எட்டிப் பார்க்கிறது. உதாராணமாக, பார்வையாளர்களுக்கு வெளிப்படுத்திய விஷயங்கள் படத்தின் கதாபாத்திரங்களுக்கு மீண்டும் சொல்லிக் கொண்டிருப்பது அயற்சி.

தொடர் கொலைகள், போலீசார் முன் கடத்தப்படும் பெண் என சட்டம் – ஒழுங்கு பிரச்சினைகளை பெரிதும் அலட்டிக்கொள்ளாமல், தமிழ் சினிமாவின் தேய்ந்த காட்சியான க்ளைமாக்ஸில் வந்து குற்றவாளிகளை பிடிக்கும் காவல் துறை, டிஜிட்டல் யுகத்தில் குற்றசம்பவத்தை பார்க்க செய்திதாளைப் புரட்டுவது, இறுதிக் காட்சியின் அதீத சினிமாத்தனம் உள்ளிட்டவை நெருடல்.

பெரிய அளவில் மெனக்கெடலில்லாமல் கதாபாத்திரம் கேட்கும் நடிப்பை கொடுத்திருக்கிறார் உதயநிதி. தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது தெரியாமல் விழிபிதுங்கி தடுமாறும் இடங்களில் நேர்த்தி. பிரச்சினைகளை பதட்டமில்லாமல் அணுகும் முறை தொடங்கி அசால்ட்டான வில்லத்தனத்துடன் தனது நடிப்பின் மூலம் கதாபாத்திரத்திற்கு கூடுதல் அழுத்தம் சேர்த்திக்கிறார் பிரசன்னா.

‘ரோஜாகூட்டம்’ படத்திற்கு பிறகு ஸ்ரீகாந்த் – பூமிகாவை ஒருசேர திரையில் பார்ப்பது நாஸ்டால்ஜி உணர்வு. இதுவரை பார்க்காத புதுவித கதாபாத்திரத்தில் பூமிகா புதுமை. ஆத்மிகா தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை செய்திருக்கிறார். காவல் துறை அதிகாரியாக வரும் மாரிமுத்து அந்தக் கதாபாத்திரத்திற்கு பொருந்ததவில்லையோ என்ற உணர்வு எழாமலில்லை. அவர் மிரட்டும் இடங்களிலும் சரி, அழுது கண்ணீர் சிந்தும் இடங்களிலும் பெரிய அளவில் ஒட்டவில்லை. சதீஷ், பழ.கருப்பையா, வசுந்தரா சென்ராயன் நடிப்பில் குறைவைக்கவில்லை.

நான் லீனியர் கதையை கச்சிதமாக வெட்டி, சில இடங்களில் ஓவர் லேப் செய்தும் திரைக்கதையை குழப்பமில்லாத வகையில் கோர்த்திருக்கும் சான் லோகேஷ் படத்தொகுப்பு தனித்து தெரிகிறது. ஜலந்தர் வாசன் ஒளிப்பதிவில் இரவுக் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.

மொத்தத்தில் ‘கண்ணை நம்பாதே’ சில பல குறைகளைத் தாண்டி த்ரில்லர் பட விரும்பிகளுக்கு தீனியாக இருந்தாலும், பொதுவான ரசிகர்களுக்கு சூடான ஸ்நாக்ஸ் மட்டுமே!