ரசிகர்களைத் தடுக்க வேண்டாம் என்று விமர்சகர்களுக்குத் தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘அண்ணாத்த’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தைத் தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்டுள்ளது. நேற்று (நவம்பர் 4) வெளியான இந்தப் படத்தை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தார்கள்.

‘அண்ணாத்த’ படம் விமர்சன ரீதியாகக் கடும் எதிர்வினைகளைச் சந்தித்து வருகிறது. பலரும் பழைய காலத்துப் படம் என்று தங்களுடைய விமர்சனத்தில் குறிப்பிட்டு வருகிறார்கள்.

இதனிடையே, விமர்சகர்களுக்குத் தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

“அன்பார்ந்த விமர்சகர்களே, மிகவும் பாதிக்கப்பட்டுள்ள சினிமா துறைக்கு வாழ்வாதாரத்துக்கான ஒரு மிகப்பெரிய மீட்சி தேவை. எனவே மதிப்பீடுகளை வழங்குவதற்கு பதில் ஆதரவு கொடுப்போம். திரையரங்குகளில் ஆனந்த் ஷங்கரின் ‘எனிமி’ மற்றும் சிவாவின் ‘அண்ணாத்த’ இரு படங்களும் முழு பொழுதுபோக்குப் படங்களாக இருப்பதைப் பார்க்க முடிகிறது. எதிர்பார்ப்புகள் வேறுபடலாம். தயவுசெய்து பொதுவான ரசிகர்களைத் தடுக்க வேண்டாம்”.

இவ்வாறு தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் தெரிவித்துள்ளார்.

விஜய் நடிப்பில் வெளியான ‘புலி’, விக்ரம் நடிப்பில் வெளியான ‘இருமுகன்’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்தவர் ஷிபு தமீன்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.