திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலக த்தில் காவல்துறை அதிகாரி களுடன் ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொண்டார். தொடர்ந்து ஆயுதப்படை மைதானத்தில் ரோந்து வாகனங்களை தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் டிஜிபி கூறியதாவது: தமிழகத்தில் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் உள்ள காவல் நிலையங்களுக்கும் தலா 2 இருசக்கர ரோந்து வாகனங்கள் வீதம் 400 இருசக்கர ரோந்து வாகனங்களை வழங்க தமிழக முதல்வர் அனுமதித்தார். அதன் அடிப்படையில் திருநெல்வேலி மாநகரில் 69 ரோந்து வாகனங்கள் காவல் நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. நகை பறிப்பு, இருசக்கர வாகனங்கள் திருட்டு, ஈவ் டீசிங் உள்ளிட்ட குற்றங்களைத் தடுக்க ஒரு வாகனத்துக்கு 2 காவலர்கள் வீதம் 24 மணி நேரமும் ரோந்துப் பணியில் ஈடுபடுவார்கள்.

தமிழகத்தில் ஆபரேஷன் கஞ்சா வேட்டை 3.0 நடைபெற்று வருகிறது. நடப்பாண்டில் 9,207 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 12,635 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 4,003 பேரின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. ரூ.23 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 2,384 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

திருநெல்வேலியில் 757 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 565 பேரின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. திருநெல்வேலி சரகத்தில் 777 ரவுடிகளும், தமிழகம் முழுவதும் 3,949 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். திருநெல்வேலியில் ஜாதி மோதல்கள், பழிக்குப்பழி வாங்கும் நடவடிக்கைகள் அதிகமாக உள்ளன.

இதை தடுக்க மூன்ற டுக்கு கண்காணிப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே நடந்த கொலை, பழிக்குப்பழி வாங்கும் சம்பவங்களில் சம்பந்தப்பட்டவர் கள் மாவட்ட மற்றும் சென்னையில் காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் உள்ள தனிப்பிரிவு மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

கடந்த காலங்களில் காவலர் களை தாக்கும் சம்பவங்கள் திருநெல்வேலியில் நடந்துள்ளன. கடந்த 2012-ம் ஆண்டு உதவி ஆய்வாளர் ஆல்வின் சுதன் சமூக விரோதிகளால் கொலை செய்யப்பட்டார். 2020-ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உதவி ஆய்வாளர் வில்சன் தீவிரவாதியால் கொலை செய்யப்பட்டார். சுப்பிரமணியம் என்ற காவலர் படுகொலை செய்யப்பட்டார்.

குற்றவாளிகளைப் பிடிக்கச் செல்லும்போது குற்றவாளிகள் தாக்குதல் நடத்த முயன்றால் அவர்களை துப்பாக்கியால் சுட எந்த தயக்கமும் காட்டக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.தென் மாவட்டங்களில் கூலிப்படை கள் ஒடுக்கப் பட்டுள்ளன. மற்ற மாநிலங்களில் பதுங்கியிருந்தவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.