உலக சுகாதார நிறுவனம் 2030-க்குள் காசநோயை ஒழிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. மத்திய அரசு 2025-க்குள் காசநோயை ஒழிக்க வேண்டும் என இலக்கு முன்வைத்து அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. புதுச்சேரி அரசின் சுகாதாரத் துறை, தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் சார்பில் காசநோய் ஒழிப்புக்காக வீடு, வீடாக சென்று பரிசோதனை செய்ய உள்ளனர். இந்த பரிசோதனை திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி மேட்டுப்பாளையம் அரசு பொது சுகாதார மையத்தில் இன்று நடைபெற்றது. முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கினார். துணைநிலை ஆளுநர் தமிழிசை வீடு வீடாக சென்று காசநோய் கணக்கெடுப்பு நடத்தும் பணியை தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் கீழ் நடமாடும் எக்ஸ்ரே எந்திரம் மூலம் வீடு, வீடாக பரிசோதனை செய்ய உள்ளனர். மரபியல் மூலம் சளி பரிசோதனையும் செய்யப்படும். இந்த பரிசோதனைகள் மூலம் காசநோயாளிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அவர்கள் பாதிக்கப்படாமல் தடுக்கலாம். முதல்கட்டமாக 60 சதவீத மக்களை இந்த ஆய்வுக்கு உட்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 2-ம் கட்ட பரிசோதனையில் எஞ்சியவர்களுக்கு பரிசோதனை நடத்தப்படும். இந்நிகழ்ச்சியில் அரசு கொறடா ஏகேடி ஆறுமுகம், சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமலு மற்றும் மார்பக நோய் பிரிவு அதிகாரிகள் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியது: “இந்தியாவிலேயே முதல்முறையாக வீடு வீடாக சென்று காசநோய் கணக்கெடுப்பு நடத்தும் பணி புதுச்சேரியில்தான் தொடங்கி இருக்கிறது. தென்கொரியாவில் இருந்து அதற்கான தொகுப்புகள் இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது. நாம் எல்லோரும் இணைந்து காசநோயை ஒழிக்க வேண்டும். காசநோய் தொற்றக்கூடியது. அதனால் குடும்பத்தில் உள்ளவர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதற்கு இப்போது தடுப்பு மாத்திரைகளும் வந்துவிட்டது. இது மருத்துவ உலகில் மிகப்பெரிய புரட்சி.

இதில் பெருமைப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், ஏற்கெனவே புதுச்சேரி காசநோய் ஒழிப்பில் வெள்ளிப் பதக்கம் பெற்றிருக்கிறது. இப்போது தங்கப் பதக்கம் வாங்குவதுதான் நமது குறிக்கோள். ரூ.57 லட்சத்தில் இந்த நடமாடும் எக்ஸ்ரே கருவி இந்தியாவிலேயே முதல் முறையாக புதுச்சேரியில்தான் தொடங்கி இருக்கிறோம். ஐசிஎம்ஆர் நிறுவனமும் கூட இனிதான் கொண்டுவரப் போகிறார்கள். கரோனா தொற்று பரவல் காரணமாக காசநோய் உள்ளிட்ட பிற நோய்களின் மீது கவனம் செலுத்த முடியாமல் இருந்தது. தற்போது மத்திய அரசு பிற நோய்களின் மீது மிகுந்த கவனம் செலுத்தியுள்ளது.

பிரதமர் உலகிலேயே எங்கும் இல்லாத அளவுக்கு காசநோயாளிகளுக்காக நிக்‌ஷய் என்ற வலைதளப் பக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார். அதன்மூலம் ஒரு காச நோயாளிக்கு ஒருவர் தானம் செய்யலாம். யார் வேண்டுமானாலும் நிக்‌ஷய் பக்கத்தில் பதிவு செய்து காச நோயாளிகளை தத்தெடுத்துக் கொள்ளலாம். நான் 100 நோயாளிகளை அவ்வாறு தத்து எடுத்திருக்கிறேன்.

தமிழக ஆளுநர் மீது தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஆளுநர்கள் உயர் நீதிமன்றத்தால் கேள்வி கேட்கக் கூடியவர்கள் அல்ல. அவர்களின் நிலை அதைவிட மேலானது என்று அரசியலமைப்பு சட்டம் சொல்கிறது. இதை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தி இருக்கிறது. அதைத்தான் இன்று உயர் நீதிமன்ற நீதிபதியும் மறு உறுதி செய்திருக்கிறார்.

ஆரோவில்லில் நானும் உறுப்பினராக இருக்கிறேன். அது லாபம் தரக்கூடிய பதவி அல்ல. சேவை செய்வதற்காக நேரத்தை ஒதுக்குகிறோம். ஆரோவில்லை மேம்படுத்த வேண்டும் என்று கடுமையாக உழைக்கிறோம்.

அனைத்து அரசுகளும் ஆதார் எண் கட்டாயம் என்று கொண்டு வருவதற்கான காரணம், அதில் போலிமை இருக்கக் கூடாது. தேவையான நபர்களுக்கு அரசு மூலம் கிடைக்கும் உதவிகள் கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்காகத்தான்” என்று தமிழிசை கூறினார்.

பின்னர் முதல்வர் ரங்கசாமி கூறுகையில்: “புதுச்சேரியில் 1500 காசநோயாளிகள் தான் உள்ளனர். இதில் 56 பேர் மட்டுமே அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடு, வீடாக சென்று பரிசோதனை செய்வதால் புதுச்சேரியில் காசநோயை முற்றிலுமாக ஒழித்துவிட முடியும்” என்று முதல்வர் ரங்கசாமி கூறினார்.