இன்று சட்டமேதை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் 131ஆம் பிறந்தநாள். அவரைப் பற்றி அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான தகவல்கள்

 • இந்திய அரசியல் சாசனத்தின் சிற்பி, நவீன இந்தியாவை உருவாக்கிய தலைவர்களில் ஒருவர் என்று போற்றப்படுபவர், பாபா சாஹேப் டாக்டர் அம்பேத்கர் என்று அழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்.
 • இன்றைய மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் உள்ள மோ என்னும் பகுதியில் 1891 ஏப்ரல் 14 அன்று அம்பேத்கர் பிறந்தார். அவருடைய தந்தை ராம்ஜி மாலோஜி சக்பால், ராணுவத்தில் பணியாற்றிவந்தார். தாய் பீமாபாய். அம்பேத்கர் மகர் என்னும் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர் என்பதால், பள்ளியிலும் சமூகத்திலும் தீண்டாமை உள்ளிட்ட பல்வேறு சாதியக் கொடுமைகளை அனுபவிக்க நேர்ந்தது.
 • பம்பாய் பல்கலைக்கழகத்தில் பொருளியல் – அரசியல் அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பரோடா மன்னரின் கல்வி உதவித்தொகை பெற்று, 1917இல் நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் படித்தார். உயர்கல்வி பெற அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் என்கிற பெருமையைப் பெற்றார். அங்கு பொருளாதாரம், அரசியல், தத்துவம், சமூகவியல் ஆகியவற்றைப் பயின்றார்.
 • மானுடவியலைத் துணைப் பாடமாகக்கொண்டிருந்ததால் ‘இந்தியாவில் சாதிகள்’ என்கிற ஆய்வுக் கட்டுரை, இந்தியப் பொருளாதாரம் குறித்து ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தார். பத்தாண்டுகள் கழித்து கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். கல்வியைத் தொடர அமெரிக்காவிலிருந்து லண்டன் சென்றார். ஆனால், மன்னரின் உதவித்தொகை முடிந்துபோனதால், 1917இல் இந்தியா திரும்பினார். சிறிது காலம் பரோடா மன்னரின் ராணுவச் செயலராகப் பணியாற்றினார். சிட்டன்ஹாம் வணிகக் கல்லூரியில் அரசியல் பொருளாதார விரிவுரையாளராகப் பணியாற்றினார். ‘மூக்நாயக்’ என்னும் இதழைத் தொடங்கினார்.
 • 1920இல் மீண்டும் லண்டன் சென்று கல்வியைத் தொடர்ந்தார். ‘அரசு நிதியைப் பரவலாக்குதல்’ என்கிற ஆய்வுக் கட்டுரைக்கு பொருளியலில் முதுநிலை அறிவியல் பட்டமும், ‘ரூபாயின் பிரச்சினை’ என்ற ஆய்வேட்டுக்கு லண்டன் பல்கலைக்கழகத்தில் பொருளியலில் முனைவர் பட்டமும் பெற்றார். கிரே’ஸ் இன் என்னும் சட்டக் கல்லூரியில் பாரிஸ்டர் பட்டம் பெற்றார்.
 • தாய்நாடு திரும்பி பிறகு பம்பாயில் சில காலம் வழக்கறிஞராகப் பணியாற்றினார். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றார். அதேநேரம் சாதியக் கொடுமைகளுக்கு எதிராகவும் சாதிரீதியாக ஒடுக்கப்பட்டோரின் உரிமைகளை மீட்பதற்காகவும் பல போராட்டங்களை முன்னெடுத்தார். பட்டியல் சாதியினரின் உரிமைகளுக்குப் போராடுவதற்காகவும் அவர்களின் கல்வி, சமூக-பொருளாதார முன்னேற்றத்தை ஊக்குவிப்பதற்காகவும் ‘பஹிஷ்கிருத் ஹி தகாரிணி சபா’ என்ற அமைப்பைத் தொடங்கினார்.
 • 1927இல் மகாராஷ்டிரத்தில் மகத் என்கிற இடத்தில் பட்டியல் சாதியினர் பொதுக் குளத்தின் நீரைப் பயன்படுத்துவதற்கான உரிமையைப் பெறுவதற்காக அவர் நடத்திய சத்தியாக்கிரகப் போராட்டம், தேசிய அளவில் கவனம் ஈர்த்தது. 1930இல் நாசிக்கில் அவர் நடத்திய காலாராம் கோவில் நுழைவுப் போராட்டத்தில் 15,000 பேர் பங்கேற்றனர். 1936இல் சுதந்திர தொழிலாளர் கட்சியைத் தொடங்கினார். 1942இல் அனைந்தித்திய பட்டியலினத்தோர் கூட்டமைப்பை உருவாக்கினார்.
 • ‘இந்திய அரசமைப்பு நிர்ணய சபை’யில் பங்கேற்று, அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவதில் சிறந்த பங்களிப்பை வழங்கினார். அரசமைப்புச் சட்டத்தின் வரைவுக் குழுவின் தலைவராகச் செயல்பட்டார். நாடு விடுதலை பெற்ற பிறகு உருவாக்கப்பட்ட அரசமைப்புச் சட்டக் குழுவுக்குத் தலைவராகவும் நாட்டின் முதல் சட்ட அமைச்சராகவும் பணியாற்றினார். இரண்டு ஆண்டுகளில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
 • இந்தியாவில் பட்டியல் சாதியினருக்குக் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு, தேர்தலில் தனித்தொகுதி, இந்துப் பெண்களின் பரம்பரைச் சொத்துரிமை ஆகியவை கிடைப்பதற்கு முதன்மைக் காரணமாக விளங்கினார். தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு எட்டு மணி நேர வேலை, வருங்கால வைப்பு நிதி உள்படத் தொழிலாளர் உரிமைகளுக்கு அடித்தளம் அமைத்தார். அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுத் தலைவராக அனைத்து மக்களுக்கும் அடிப்படை உரிமைகள், சிவில் உரிமைகள் உறுதி செய்யப்படுவதற்கும் இந்தியா ஒரு இறையாண்மைமிக்க மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசாக உருவாவதற்கும் முக்கியப் பங்காற்றினார்.
 • ‘இந்தியாவில் சாதிகள்’, ‘சாதியை அழித்தொழித்தல்’, ‘புத்தரும் அவரது தம்மமும்’ ஆகியவை அவர் எழுதிய முக்கியமான நூல்களில் சில. இந்து மதத்தின் வர்ணாசிரம சாதி அமைப்பைக் கடுமையாக விமர்சித்த அம்பேத்கர், 1956 அக்டோபர் 14 அன்று மகாராஷ்டிரத்தின் நாகபுரியில், ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் பெளத்த மதத்தைத் தழுவினார்.
 • 1906இல் ரமா பாய் என்பவருடன் அம்பேத்கருக்குத் திருமணம் நடந்தது. இந்த இணையரின் முதல் மகன் யஷ்வந்த் அம்பேத்கர். இரண்டாம் மகன் ராஜரத்னா பிறந்த இரண்டு ஆண்டுகளில் நிமோனியாவால் இறந்தார். 1935இல் ரமாபாய் மரணமடைந்தார். 1948இல் சாரதா கபீர் என்னும் மருத்துவரை அம்பேத்கர் மணந்தார். 1956 டிசம்பர் 6 அன்று அம்பேத்கர் இயற்கை எய்தினார்.