சிறந்த கல்வித் தொண்டாற்றும் நல்லாசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை தலைமைச் செயலகத்தில் வழங்குகிறார்.
மாணவர்களின் அறிவுக் கண்ணைத் திறக்கும் ஆசிரியராகத் தன்னுடைய வாழ்வைத் தொடங்கி, இந்திய நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்து, ஆசிரியர் சமுதாயத்திற்குப் பெரும் சிறப்பினைச் சேர்த்த தத்துவ மேதை டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்டம்பர் 5ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில், சிறந்த கல்வித் தொண்டாற்றும் நல்லாசிரியர்களுக்கு “டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது” வழங்கி தமிழ்நாடு அரசு கவுரவித்து வருகிறது.
அந்த வகையில், இந்த ஆண்டு சிறந்த முறையில் பணியாற்றிய ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் பல்வேறு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் 385 ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு செப்.5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருவதால், முன்னதாக இன்று (செப்.3) மாலை தலைமைச் செயலகத்தில் 5 ஆசிரியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விருது வழங்குகிறார். அத்துடன் கல்வித் துறைசார் பணி நியமன உத்தரவு வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஆணையர் நந்தகுமார் உள்ளிட்ட பல்வேறு உயர் அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர்.
இதையடுத்து, செப்.5ஆம் தேதி, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சியர் தலைமையில் நல்லாசிரியர் விருது வழங்கும் விழா நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டு விருதுக்கு விண்ணப்பிக்கக் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும் என்ற விதிமுறை தளர்த்தப்பட்டு, குறைந்தபட்சம் 5 வருடங்கள் பணிபுரிந்தால் போதும் என்று மாற்றப்பட்டது. அதேபோல கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் இணையவழிக் கல்வி உள்ளிட்ட மாணவர்களை நேரடியாகச் சென்றடையும் வகையில் கல்விப் பணியாற்றியிருக்க வேண்டும். பெருந்தொற்றுக் காலத்தில் கல்விப் பணி ஆற்றாத ஆசிரியர்களை அறவே தவிர்க்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.