போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்திருக்கும் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன், போதை பொருள் தடுப்பு பிரிவில் ஆஜரானார். மும்பை அருகே சொகுசு கப்பலில் கடந்த மாதம் 2ம் தேதி போதை பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடி சோதனை நடத்தினர். அச்சமயம் போதை விருந்தில் பங்கேற்றதாக நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் உள்ளிட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டு மும்பை ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். 22 நாட்களை சிறை வாசத்திற்கு பிறகு ஆர்யனுக்கு கடந்த 30ம் தேதி ஜாமின் கிடைத்தது.

14 நிபந்தனைகளின் அடிப்படையில் ஆர்யன் கானுக்கு மும்பை நீதிமன்றம் பிணை வழங்கியது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 11 மணி முதல் பிற்பகல் 2 மணிக்குள் என்.சி.பி. அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. அதன்படி, நீதிமன்றத்தின் நிபந்தனையை ஏற்று மும்பையில் உள்ள போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆர்யன் கான் நேரில் ஆஜரானார். என்.சி.பி. அலுவலகத்தில் வழக்கான பிணை ஆவண நடைமுறைக்கு பிறகு ஆர்யன் கான் அங்கிருந்து தன்னுடைய இல்லத்திற்கு புறப்பட்டு சென்றார்.