சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: சென்னையில் கடந்த 7 நாட்கள் சோதனை நடத்தப்பட்டு, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் வைத்திருந்தது மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக 70-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 180-க்கும்மேற்பட்டோர் கைது செய்யப்பட் டுள்ளனர்.
அவர்களிடமிருந்து 67 கிலோ கஞ்சா, 51 கிராம் மெத்தம்பட்டமைன், 7,125 உடல்வலி நிவாரண மாத்திரைகள், 14 செல்போன்கள், 2 லேப்டாப், 1 ஐபேட், 6 இருசக்கர வாகனங்கள் மற்றும் ரூ.5 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், போதைப் பொருள்கடத்தலை முற்றிலும் தடுக்க பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.
ஆந்திர மாநிலத்திலிருந்து அதிக அளவில் போதைப் பொருட்கள் சென்னைக்கு வருவதாக தகவல் கிடைத்துள்ளது. அதைத்தடுப்பது குறித்து ஆந்திர மாநிலபோலீஸாருடன் ஆலோசித்துள் ளோம். மேலும், கூரியர் மூலம்போதைப் பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க, அந்நிறுவன நிர்வாகிகளுக்கும் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
வாகனங்களில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தப்படுவதை கண்டுபிடிக்க மோப்பநாய்களைப் பயன்படுத்த உள்ளோம். போதைக்கு அடிமையானவர்களை மீட்பதற்காக சுகாதாரத் துறை, உணவு பாதுகாப்புத் துறை,காவல் துறை இணைந்து மறுவாழ்வுத் திட்டத்தை தொடங்க உள்ளன.
இவ்வாறு காவல் ஆணையர் கூறினார். கூடுதல் காவல் ஆணையர்கள் செந்தில்குமார், கண்ணன் உடனிருந்தனர்.