ஆப்கானிஸ்தான் தலிபான்கள் வசம் சிக்கியதையடுத்து அங்கிருந்து வருவர்களின் வசதிக்காக மின்னணு முறையில் அவசரகால விசா பெற்றுக் கொள்ளலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஆப்கனில் நடந்த ஆயுதப் போரில் தலிபான்கள் வென்றுள்ளதாக ஆப்கன் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிபர் அஷ்ரப் கானி ஆப்கன் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்காவுக்கான தூதரக அதிகாரிகளும் வெளியேறியுள்ளனர். பல நாடுகளைச் சேர்ந்த தூதரக அதிகாரிகளும் சிக்கி்க் கொண்டனர். அவர்களை மீட்டு வர ஒவ்வொரு நாடும் விமானத்தை அனுப்பி வருகிறது.

காபூலில் சிக்கியிருந்த இந்திய அதிகாரிகள், தூதரக ஊழியர்கள், செய்தியாளர்கள் உள்ளிட்ட 140-க்கும் மேற்பட்டோரை இந்திய விமானப்படை விமானம் பத்திரமாக மீட்டது. இதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா வருவதற்கான விசா கட்டுப்பாடுகளை மத்திய உள்துறை அமைச்சகம் தளர்த்தி உள்ளது.

ஆப்கனில் இருந்து இந்தியா வர விரும்புபவர்களுக்காக இந்தியாவுக்கான விசாவில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி மின்னணு முறையில் அவசரகால விசா பெறும் புதிய நடைமுறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் ஆப்கனில் இருந்து வருபவர்கள் சிக்கலின்றி வந்து சேர ஏதுவாக இருக்கும்.