தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் வரும் 23-ம் தேதியுடன் முடிவடைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் கடந்த 7-ம் தேதி தொடங்கியது. இது வரும் 29-ம் தேதி வரை நடைபெறும் என்றும், மொத்தம் 17 அமர்வுகள் நடைபெறும் என்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி ஏற்கெனவே அறிவித்திருந்தார். எனினும், நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் முன்கூட்டியே முடிவடைய இருக்கிறது.
நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடர்பாக, அலுவலக பரிந்துரை குழு இன்று கூடி ஆலோசனை மேற்கொண்டது. இதில், வரும் 23-ம் தேதியோடு குளிர்காலக் கூட்டத் தொடரை முடித்துக்கொள்வது என ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
இந்திய – சீன ராணுவ வீரர்களுக்கு இடையே நிகழ்ந்த மோதல் விவகாரம், இந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் மிக முக்கிய விஷயமாக இருந்தது. இது குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இரு அவைகளிலும் விளக்கம் அளித்தார். எனினும், இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இதனை அரசு ஏற்கவில்லை. இதனால், எதிர்க்கட்சிகள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து வெளிநடப்பில் ஈடுபட்டன. இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் கோரிக்கை ஏற்கப்படாமலேயே கூட்டத் தொடர் நிறைவடைய இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.