வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் இன்று அதிகாலை நில அதிர்வு பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை அறிவித்துள்ளது.

வடகிழக்குப் பருவமழை தமிழகம் முழுவதும் தீவிரமாகப் பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதற்கு மத்தியில், வேலூர் அருகே இன்று அதிகாலை நில அதிர்வு உணரப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து தமிழக பேரிடர் மேலாண்மை தரப்பில், “(29.11.2021) இன்று அதிகாலை 4.17 மணி அளவில் வேலூரில் இருந்து மேற்கு-தென்மேற்கு திசையில் 59 கி.மீ. தொலைவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. அதாவது திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 3.6 ஆகப் பதிவாகியுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, வேலூர் மாவட்ட ஆட்சியர் தரப்பில் வெளியான தகவலில், குடியாத்தம் அருகே உள்ள தட்டப்பாறை கிராம மதுரா மீனூர் கொல்லைமேடு பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவருக்குச் சொந்தமான மாடி வீட்டில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.