திருவொற்றியூர்: வடகிழக்கு பருவ மழை காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால், வட சென்னைக்கு உட்பட்ட திருவொற்றியூர் ராஜாஜி நகர் பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. குடியிருப்புக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். பலர் உறவினர் வீடுகளில் தஞ்சம் புகுந்தனர். மழையால் பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்து மாநகராட்சி சார்பில் 3 வேளையும் உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று மழையால் பாதிக்கப்பட்ட பகுதியான திருவொற்றியூர் ராஜாஜி நகரில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண பொருட்கள் வழங்கினார். இதையடுத்து, முன்னாள் எம்எல்ஏ குப்பன் ஏற்பாட்டில் அரிசி, வேட்டி, சேலை, பால் மற்றும் நிவாரண உதவிகளை எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.
முன்னாள் அமைச்சர்கள் மாதவரம் மூர்த்தி, ஜெயக்குமார், வளர்மதி, பெஞ்சமின் மற்றும் கட்சி நிர்வாகிகள் அஜாக்ஸ் பரமசிவம், சிவில் முருகேசன், கே.கார்த்திக், தனரமேஷ், டோக்கியோ மணி, சரவணன் உட்பட பலர் உடன் சென்றனர்.
நிவாரண முகாமில் தள்ளுமுள்ளு
சென்னை புழல் தமிழன் நகர், காஞ்சி அருள் நகர், திருநீலகண்ட நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதி மக்களுக்கு திமுக மற்றும் பல்வேறு கட்சியினர் நிவாரண உதவிகள் வழங்கி வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்குவதற்காக தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை 11.15 மணிக்கு தமிழன் நகருக்கு வருகை தந்தார். முன்னதாக இந்த உதவிகளை பெறுவதற்காக ஓரிடத்தில் மக்கள் வரவழைக்கப்பட்டனர்.
இதையடுத்து அந்த இடத்துக்கு பெண்கள் உள்பட ஏராளமானோர் வந்திருந்தனர். நிவாரண உதவிகள் வழங்கும்போது வரிசையில் நிற்பதற்காக தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. இதையடுத்து அவர்களை அதிமுகவினர் சமாதானப்படுத்தி வரிசையாக நிற்கவைத்து நிவாரண உதவிகள் பெற ஏற்பாடு செய்தனர்.