Site icon Metro People

தமிழகத்தில் காலியாக உள்ள 2 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு அக்.4 அன்று தேர்தல்: செப்.15-22 வேட்புமனுத் தாக்கல்

தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினருக்கான 2 காலி இடங்களுக்கு அக்.4ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என, இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதிமுக சார்பாக, மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதனால், தங்களுடைய எம்.பி. பதவிகளை அவர்கள் ராஜினாமா செய்தனர். இதையடுத்து அவ்விரு இடங்களும் காலியானதாக, இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்நிலையில், அந்த 2 காலி இடங்களுக்கு அக்.4 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என, இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் இன்று (செப். 09) வெளியிட்டது.

தமிழகத்தில் 2 காலியிடங்கள், மேற்கு வங்கம், அசாம், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா 1 காலியிடம் என, மொத்தம் 6 காலியிடங்களுக்கு அன்றைய தினம் தேர்தல் நடைபெற உள்ளது.

இத்தேர்தலுக்கு செப்.15-ம் தேதி தொடங்கி, செப்.22 வரை வேட்புமனுத் தாக்கல் நடைபெறுகிறது. செப். 23ஆம் தேதி வேட்புமனு மறுபரிசீலனையும், வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் செப். 27ஆம் தேதி எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை அக்.4 அன்று காலை 9 மணியில் இருந்து மாலை 4 மணி வரை நடைபெறும். மாலை 5 மணிக்குத் தேர்தல் முடிவுகள் வெளியாகும்.

இவ்விரு காலியிடங்களில், வைத்திலிங்கத்தின் பதவிக் காலம் 2022, ஜூன் மாதம் மற்றும் கே.பி.முனுசாமியின் பதவிக் காலம் 2026, ஏப்ரல் மாதம் முடிவடையும்.

முன்னதாக, மாநிலங்களவையில் காலியாக இருந்த ஒரு இடத்தில், திமுகவின் எம்.எம்.அப்துல்லா போட்டியின்றி சமீபத்தில் தேர்வானது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version