உலகின் முதல் நிலை பணக்காரர் ஆன எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கி உள்ள சூழலில், ட்விட்டரை இதற்கு முன்னர் நிர்வகித்து வந்த நிர்வாகிகள், வெறுப்பூட்டும் வகையில் முரண்பாடான கருத்துகளை தெரிவித்து வந்த நபர்களின் ட்விட்டர் கணக்குகளுக்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டது. அதனை இப்போது மஸ்க் திரும்பப் பெற வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது. இதில் அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், நடிகை கங்கனா ரனாவத் போன்றவர்களும் அடங்குவர்.

எந்தவொரு ட்விட்டர் பயனரையும் இந்தத் தளத்தில் இருந்து நிரந்தரமாக தடை செய்வது கூடாது. அதுவே, தானியங்கு முறையில் செயல்படும் பாட் மற்றும் ஸ்பேம் கணக்குகளை தடை செய்யலாம் என மஸ்க் தெரிவித்ததாக தகவல். “சின்னஞ்சிறிய மற்றும் சந்தேகத்திற்குரிய காரணங்களுக்காக இடைநீக்கம் செய்யப்பட்டவர்கள் ட்விட்டர் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார்கள்” என மஸ்க் ட்வீட் செய்திருந்தார்.

இதுதான் இப்போது பேசு பொருளாகி உள்ளது. அவர் ட்விட்டரை வாங்க உள்ளார் என்ற தகவல் வெளியான போதே தடை செய்யப்பட்ட கணக்குகள் மீண்டும் செயல்பாட்டுக்கு வரும் என சொல்லப்பட்டது. மறுபக்கம் ட்விட்டர் தளத்தில் வெறுப்பு பேச்சுகள் அதிகரிக்கக்கூடும் எனவும் சொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2021 ஜனவரி வாக்கில் ட்ரம்பின் ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக தடை செய்யப்பட்டது. இது தொடர்பாக ட்விட்டர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது. அதே போல நடிகை கங்கனா ரனாவத் கணக்கும் முடக்கப்பட்டது. ட்விட்டர் விதிகளை மீறி அவரது செயல்பாடு இருந்ததாக அப்போது தெரிவிக்கப்பட்டது. இந்த சூழலில் மஸ்கின் இந்த அறிவிப்பு கவனம் பெற்றுள்ளது. இருந்தாலும் ட்ரம்ப் மீண்டும் ட்விட்டரில் செயல்படுவது மிகவும் கடினம் என தெரிகிறது. ஏனெனில் அவர் தனக்கென பிரத்யேகமாக ‘ட்ரூத் சோஷியல்’ என்ற ஒரு சமூக வலைதளத்தை நிறுவியுள்ளார்.