நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் குரூப் சுற்றுப் போட்டியில் நமீபியாவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது ஐக்கிய அரபு அமீரகம். இதன் மூலம் நெதர்லாந்து கிரிக்கெட் அணி அடுத்த சுற்றான சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறி உள்ளது. தோல்வியைத் தழுவிய காரணத்தால் முதல் சுற்றோடு நடையை கட்டுகிறது நமீபியா. வெற்றி பெற்ற ஆறுதலுடன் அமீரகமும் முதல் சுற்றோடு வெளியேறி உள்ளது. இதனை நமீபியாவுக்கு அமீரகம் கொடுத்துள்ள அப்செட் என்றும் சொல்லலாம்.

ஆஸ்திரேலியாவின் ஜிலாங் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற அமீரகம் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் டாப் 5 பேட்ஸ்மேன்களில் 4 பேர் டீசன்டாக ஆடி இருந்தனர். தொடக்க ஆட்டக்காரர் முகமது வாசிம், 50 ரன்கள் எடுத்தார். கேப்டன் ரிஸ்வான் 29 பந்துகளில் 43 ரன்கள் விளாசினார். விக்கெட் கீப்பர் அரவிந்த் 21 ரன்களும், ஹமீது 25 ரன்களும் எடுத்தனர்.

20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 148 ரன்களை எடுத்தது அமீரகம். 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நமீபியா விரட்டியது. அந்த அணி சுலபமாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. முதல் போட்டியில் இலங்கையை 55 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அந்த அணிக்கு இந்த நிலை. இறுதியில் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு வெறும் 141 ரன்கள் மட்டுமே நமீபியா எடுத்தது.

இதன் மூலம் ஆட்டத்தை இழந்து முதல் சுற்றோடு நடையை கட்டி உள்ளது. மறுபக்கம் 2 வெற்றிகளை பெற்ற நெதர்லாந்து அணி குரூப்-ஏ பிரிவில் இரண்டாம் இடம் பிடித்து சூப்பர் 12 (குரூப் 2) சுற்றுக்கு முன்னேறி உள்ளது. அந்த அணி இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் மற்றும் குரூப் பி சுற்றில் முதலிடம் பிடிக்கும் அணியுடன் விளையாட உள்ளது.

இந்தப் பிரிவில் முதலிடம் பிடித்துள்ள இலங்கை அணி ‘சூப்பர் 12’ குரூப் 1-இல் உள்ள ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து மற்றும் குரூப் பி சுற்றில் இரண்டாம் இடம்பிடிக்கும் அணியுடன் விளையாட உள்ளது.